வாசிப்பை நேசிப்போம்: அறிவியல் நூல்கள்

வாசிப்பை நேசிப்போம்: அறிவியல் நூல்கள்
Updated on
2 min read

2020ஆம் ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க அறிவியல் நூல்கள்

அறிவியல் அறிமுகக் கதைகள் வரிசை

மி.இலியின் - யெ.செகால்; தமிழில்: எஸ்.தோதாத்ரி

ரஷ்ய எழுத்தாளர்களான மிக்கைல் இலியின், யெலனா செகால் ஆகிய இருவரும் எழுதிய ஏழு அறிவியல் நூல்கள் தமிழில் வரிசை நூல்களாக வெளியாகியுள்ளன. ‘பள்ளிப் பைக்கட்டு’, ‘ஒரு நகரின் வீதியிலே’, ‘அற்புதமான களஞ்சியம்’, ‘இயற்கையின் நெடுங்கணக்கு’, ‘காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்’, ‘சாமான்கள் எங்கிருந்துவருகின்றன’, 'மந்திரப் பழத்தோட்டம்' ஆகிய தலைப்புகளில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இயற்கை, உழவு, சுற்றுச்சூழல், அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஆகியவை தொடர்பாக எழும் எளிய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை இந்த நூல் வரிசை அளிக்கிறது.

நீலவால்குருவி, தொடர்புக்கு: 98406 03499

பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்

யானிஸ் வருஃபாகிஸ்; தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல்-புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் தன் மகளுக்கு பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற புதுமையான வடிவத்தில் எழுதப்பட்ட நூல். இவற்றினூடாக முதலாளித்துவப் பொருளாதாரம், அதன் இயங்கு முறை, அதன் பிடியிலிருந்து விடுபடுவது எப்படி ஆகியவற்றை நூலாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். நூலின் ஆசிரியரான யானிஸ் வருஃபாகிஸ், புகழ்பெற்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர். இந்த சமூக அறிவியல் நூல் தமிழுக்கு குறிப்பிடத்தக்க வரவு.

க்ரியா, தொடர்புக்கு: 72999 05950

ஆதி இந்தியர்கள்

டோனி ஜோசஃப்; தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி

இந்தியா என்று இன்றைக்கு அறியப் படும் நிலப் பகுதியில் முதன்முதலில் வாழ்ந்தவர்கள் யார் என்னும் கேள்விக்கு விடை சொல்லும் நூல். ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதர்கள் இந்தியாவை வந்தடைந்த 65,000 ஆண்டு கால வரலாற்றிலிருந்து தொடங்கு கிறது. சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் யார், ஆரியர்கள் எங்கிருந்து-எப்போது வந்தார்கள், வட இந்தியர்களும் தென்னிந் தியர்களும் மரபியல்ரீதியாக வேறுபட்டவர்களா என்பது போன்ற அடிப்படையான வரலாற்று, மானுடவியல் கேள்வி களுக்கு இந்த நூல் அறிவியல்பூர்வமாக விடையளிக்கிறது. விரிவான ஆதாரங் களுடன் எழுதப்பட்டுள்ளதால், பலராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாத எதிர்வினையைப் பெற்றுப் பிரபலமடைந்த நூல்.

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், தொடர்புக்கு: 98194 59857

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?

ஆயிஷா இரா.நடராசன்

இயற்பியல். வேதியியல், விண்வெளி யியல் என அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு. தலைப்புக் கட்டுரை, ஸ்டீபன் ஹாக்கிங் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழ் வடிவம். ரிச்சர்ட் டாக்கின்ஸ், வேதியியல் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், பிரித்தானிய விண்வெளி வீரர் திம் பீக் உள்ளிட்டோரின் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 2433 2924

வாழ்வு... இறப்பு... வாழ்வு...

(லூயி பஸ்தேர் வாழ்க்கை வரலாறு)

எரிக் ஒர்சேனா; தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

தன்னுடைய அயராத ஆய்வுப் பணிகளால் மருத்துவத் துறைக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் பங்களித்தவர் பிரெஞ்சு அறிஞர் லூயி பஸ்தேர். பால் உள்ளிட்ட கால்நடை உற்பத்திப் பொருள்களை நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அவர் கண்டறிந்த முறையே பஸ்டராக்கம். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி கண்டறிந்தது, பெப்ரீன் நோயிலிருந்து பட்டு உற்பத்தியை மீட்டது என பஸ்தேரின் ஆய்வுகள் மனிதக் குலத்துக்கு பெரும் நற்பயன்களைத் தந்துள்ளன. இந்த நூல் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் வெளியாகியுள்ளது.

தடாகம், தொடர்புக்கு: 98400 70870

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in