

“லத்தீன் அமெரிக்கத் துணைக் கண்டத்தின் இயற்கை அழகை அறிவியல் பார்வையில் அணுகி, அதை ஆவணப்படுத்திய மகத்தான ஆய்வாளர் ஹம்போல்ட்”- சைமன் பொலிவார், தென் அமெரிக்காவின் முதல் விடுதலைப் போராளி.
ஐரோப்பியக் கண்டம் அல்லாத நிலப்பரப்பைப் பார்ப்பதற்கான ஆர்வம் ஹம்போல்டை உற்சாகமடையச் செய்தது. டெனெரிஃப் தீவின் பிகோ டெல் டெய்தே எரிமலையில் ஏறி இறங்கினார். அதுவரை நிலவி வந்த புவித் தோற்றம் குறித்த நெப்டியூனியவாதிகளின் கருத்தாக்கத்தை இது மாற்றியது. புவிப்பாளச் செயல்பாடுகள்தாம் தொடர்ச்சியாக நில அமைப்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன என்கிற வாதத்தை ஹம்போல்ட் ஏற்றுக்கொண்டார். சிந்தனை மாற்றம் ஏற்படுவதற்குக் கள அனுபவம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
வெனிசுலாவின் 1,700 மைல் நீள ஒரினாகோ ஆற்றைக் கடக்கும் பயணத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையையே, இன்று நாம் பல பெயர்களில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். ‘வாழிடம்’, ‘தகவமைவு’, ‘சுற்றுச்சூழலுக்கும் காலநிலைக்கும் உள்ள தொடர்பு’, ‘உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் உள்ள தொடர்பு’, ‘பெருங்கடல் நீரோட்டத்துக்கும் காலநிலைக்கும் உள்ள தொடர்பு’, ‘பழங்குடி மக்களின் மரபார்ந்த அறிவுக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ள தொடர்பு’ என இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் பல அறிவியல் கருத்துகளை ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்த ஆளுமை ஹம்போல்ட்தான்.
ஐரோப்பிய நிலப்பகுதியின் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெப்ப மண்டலப் பகுதியான வெனிசுலா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளின் 6,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை ஐரோப்பிய நாடுகளின் இளைய அறிவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பல புதிய ஆய்வுகளுக்கு ஹம்போல்ட் அடித்தளமிட்டார்.
அரசியலும் இயற்கையும்
ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் மூன்றாம் அதிபரான தாமஸ் ஜெபர்சனை 1804-ல் ஹம்போல்ட் சந்தித்தார். ஜெபர்சனும் ‘வெள்ளையர்களைவிட மனத்தாலும் உடலாலும் கறுப்பின மக்கள் தாழ்ந்தவர்கள்’ எனும் நிலைப்பாட்டில்தான் இருந்தார். “இயற்கைக்கு எதிரான எந்த ஒன்றுமே தீயது, மதிப்பிடத்தக்க தகுதி இல்லாததுதான். இயற்கையில் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கிடையாது” என்று ஜெபர்சனிடம் ஹம்போல்ட் நேரடியாகவே வலியுறுத்தினார்.
அதற்கு முன்னதாக ஹம்போல்ட், அமெரிக்காவில் குறுக்குநெடுக்காக இரண்டு வாரப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது தோட்ட வேலையில் அடிமைகள் நடத்தப்பட்ட விதத்தை ஓவியமாக வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் பின்னாளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. தென் அமெரிக்கப் பயணம் முழுவதும் தான் கண்ட அடிமைகளின் மோசமான வாழ்க்கை சூழலை ஹம்போல்ட் பதிவுசெய்துள்ளார்.
“தழும்புகளோ கீறல்களோ இல்லாத ஒரேயோர் அடிமையைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. பிரெஞ்சு, பிரிட்டானியா, ஸ்பானிய அரசுகளுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக, வலிமைமிக்க அரசுகளின் உயிர்நாடியாக அடிமை வணிகம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“எனது ஆசிரியர் இயற்கை. இயற்கை அனைவருக்குமான சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் அரசியல், நீதி போதனைகளுக்கேற்ப இயற்கை அளிக்கப்பட்ட இந்தச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்போது, பறிக்கப்படும்போது அசமத்துவ இயற்கைச் சூழல் உருவாகிறது. இந்த உலகில் யானைகள், உயர்ந்த ஓக் மரங்கள், சிறு வண்டுகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் ஒரு வகையில் சூழலியல் பங்களிப்பைச் செலுத்திவருகின்றன. அவற்றைப் போலத்தான் மனிதனும். மனிதநேயம் என்பது மிகச் சாதாரணமாக, எளிதில் யாராலும் கடைப்பிடிக்கப்படக்கூடிய ஒன்று. இயற்கையை நேசிப்பதில் ஜனநாயகத்துக்கான சுதந்திரமும் உள்ளடங்கியே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் ஹம்போல்ட்.
மீண்டும் ஐரோப்பாவில்…
தனது 6 ஆண்டு காலப் பயணத்தை முடித்துவிட்டு 1804 ஆகஸ்ட்டில் பாரீஸுக்கு அவர் திரும்பினார். ஒரு நாயகனுக்குரிய வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 60,000 தாவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பியத் தாவரவியலாளர்களுக்குப் புதிதாக 3,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை அறிமுகம் செய்து, புதிய ஆய்வுகளுக்கு ஹம்போல்ட் வழிகோலினார்.
இதே காலகட்டத்தில்தான் லமார்க்கின் உயிரினங்களின் தகவமைவுக் கோட்பாடும், புதைபடிவ எலும்புக்கூடுகள் தற்போதைய உயிரினங்களுடன் தொடர்பு இல்லாமல் இருக்கின்றன என்னும் கூவியரின் கண்டுபிடிப்பும் அறிவுத் தளத்தில் தீவிரமாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தன.
அரசியல் ரீதியாக நெப்போலியன் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். அறிவியல் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் நெப்போலியன் அலாதி ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இருந்தாலும் பிரஷ்யாவின் மீதான அவருடைய படையெடுப்பு, மண்ணின் மைந்தரான ஹம்போல்டுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த நேரத்தில்தான் “இரண்டு நாடுகளின் அரசுகளும் போரிட்டுக்கொள்ளட்டும். ஆனால், இரண்டு நாடுகளின் அறிவியல், அமைதியைக் கைகொள்ளட்டும்” என்கிற புகழ்பெற்ற மேற்கோள் அவரிடமிருந்து பிறந்தது. இந்த காலகட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் ஹம்போல்ட் சந்தித்தார்.
அரசியல் எழுத்து
1808 -1811 வரை, ஸ்பானிய காலனியாதிக்கக் கொடுமைகளை விமர்சித்து ‘Political Essay On the Kingdom of New Spain’ எனும் நூலை நான்கு தொகுதிகளாக அவர் வெளியிட்டார். அன்று சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்துகொண்டிருந்த பல அரசுகளை இது ஆட்டங்காணச் செய்தது. தாமஸ் ஜெபர்சன், சைமன் பொலிவார் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகளின் சிந்தனையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1814-ல் இதே நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இது இன்னும் பரவலான அதிர்வலைகளை உருவாக்கியது.
அடுத்த நூலான ‘Political Essay on the Island of Cuba’ என்னும் நூல் கியூபாவில் காலனியாதிக்கம், பருவநிலை, மண் வளம், வேளாண்மை, அடிமை நிலை, புள்ளிவிவரங்கள், பொருளாதாரம் உள்ளிட்டவற்றைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிய நூலாகக் கருதப்படுகிறது.
“ஹம்போல்டின் பேனாதான் உறக்கத்தில் இருந்த லத்தீன் அமெரிக்காவை விழிப்படையச் செய்தது” என்கிற சைமன் பொலிவாரின் கூற்றே, அவரது அரசியல் எழுத்தைப் பறைசாற்றப் போதும். இதற்கிடையே 1822-ல் லத்தீன் அமெரிக்காவில் விடுதலைத் தீ, சுடர் விட்டெரியக் காரணமாக இருந்த சைமன் பொலிவாரின் போராட்டங்கள் குறித்து, “உங்கள் அழகான தேசத்தின் விடுதலை, சுதந்திரத்துக்கான முதல் போராளியாக வரலாற்றில் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்” என்று பொலிவாருக்கான ஒரு கடிதத்தில் ஹம்போல்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதேநேரம் ஹம்போல்டின் அரசியல் நூல்களே அவரது வாழ்நாள் கனவான இமயமலைப் பயணத்தைத் தடுத்துவிட்டன. அவருடைய நூலில் வெளிப்பட்ட காலனியாதிக்க விமர்சனம், கிழக்கிந்தியக் கம்பெனியையும் கலக்கமடையச் செய்ததால், இமயமலை செல்லக் கடைசிவரை அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தனது அமெரிக்கப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகப் பல கல்வி நிறுவனங்களுக்கு ஹம்போல்ட் அழைக்கப்பட்டார். பல்துறை இளம் ஆராய்ச்சியாளார்களிடம் கலந்துரையாடினார். இத்தகைய நிறுவனச் சந்திப்பு அவருடைய அடுத்தகட்ட நகர்வுக்கு அடித்தளமாக அமைந்தது.
(தொடரும்)
- செ.கா., கட்டுரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: erodetnsf@gmail.com