மகத்தான அறிஞர் ஹம்போல்ட்: இயற்கை அறிவியலின் தீராத ஊற்று 

மகத்தான அறிஞர் ஹம்போல்ட்: இயற்கை அறிவியலின் தீராத ஊற்று 
Updated on
3 min read

செ.கா.

“நம் காலத்தின் மிகச் சிறந்த அறிவியலாளர் - ஹம்போல்ட்” - தாமஸ் ஜெபர்சன், அமெரிக்காவின் மூன்றாவது அதிபர்.

வட, தென் அமெரிக்கக் கண்டங்களின் அநேகப் பகுதிகள், ஐரோப்பியக் கண்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இன்றைக்கும் ஹம்போல்ட்டின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்தப் புவியில் தனிநபர் ஒருவரின் பெயரால் அநேக இடங்கள் அழைக்கப்படுகின்ற பெருமையைக் கொண்டவர் ஹம்போல்ட். இப்படிப் பல இடங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ள ஒருவர், ஓர் அறிவியல் அறிஞர் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்? அறிவியல் துறையையும், அறிவியல் அறிஞரையும் இதைவிடச் சிறப்பாகப் போற்ற முடியாது.

புகழ்பெற்ற பன்முக அறிவியல் அறிஞரான அலெக்சாண்டர் ஹம்போல்ட்டின் 250-வது பிறந்தநாள் செப்டம்பர் 14-ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

யார் இந்த ஹம்போல்ட்?

உலக வரலாற்றையும் அறிவியலின் பார்வையையும் தலைகீழாகத் திருப்பிய டார்வினின் ‘On the Origin Of the Species’ நூலை எழுதுவதற்கான அடிப்படைப் பார்வையைத் தந்தவர் ஹம்போல்ட். உலகெங்கும் இயற்கையின் அமைப்பை, அதன் புவியியல் தன்மை, காலநிலை ஆகியவற்றின் அடிப்படையில் (Isotherms) வகைப்படுத்தியவர். அடிமைகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய முதல் அறிவியலாளர். புவி காந்தப்புலம் குறித்த இன்றைய ஆய்வுகளுக்கு அடிகோலியவர். பருவநிலை மாற்றம் குறித்த அபாயத்தை அன்றே விளக்கியவர். இளைய தலைமுறைகளை ஊக்குவித்து, பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊற்றாக விளங்கியவர்.

அறிமுகம்

இன்றைய ஜெர்மனியில் (அன்றைய பிரஷ்யா), 1769-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று ராணுவ அதிகாரிக்கும் செல்வச் சீமாட்டிக்கும் இரண்டாவது மகனாக ஹம்போல்ட் பிறந்தார். அவருடைய அண்ணன் வில்ஹெம் ஹம்போல்ட், தத்துவம் - கல்விப் பணிகளுக்காக இன்றும் அறியப்படுபவர்.

ஹம்போல்ட் தன்னுடைய 9 வயதிலேயே அதிகப் பிரியத்துக்குரிய தந்தையை இழந்துவிட்டார். அந்த வயதிலேயே தன்னைச் சுற்றியுள்ள சிற்றுயிர்களைச் சேகரித்து, அவற்றை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பொருளாதாரத்தைப் படிப்பதன் மூலம் எளிதில் அரசின் உயர் பதவிகள் கிடைக்கும் என்கிற தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

தொடக்கப் புள்ளி

1700-களின் பிற்பகுதி என்பது ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பல புதிய சிந்தனைகள் ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்த காலம். புதிய சிந்தனைகளும் அதன் மீதான விவாதங்களும் அன்றைய இளைஞர்களிடத்தே பரவலாகத் தாக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அப்போதுதான் ஹம்போல்ட் - ஜியோர்ஜ் ஃபோர்ஸ்டரை சந்தித்தார். அந்தச் சந்திப்பு அவரது எதிர்கால வாழ்க்கையை வடிவமைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் பயணித்தனர். அதுவே ஹம்போல்ட்டின் முதல் கடற்பயணமும்கூட.

இந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு ராயல் அறிவியல் கழகத்தின் தலைவர் ஜோசப் பேங்க்ஸை ஹம்போல்ட் சந்தித்தார். ஜியோர்ஜ் ஃபோர்ஸ்டரும், ஜோசப் பேங்க்ஸும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் குக்கின் புகழ்பெற்ற ஆய்வுப் பயணத்தில் பங்கெடுத்திருந்தவர்கள். பயணத்தில், தான் சேகரித்திருந்த உலர் தாவரத் தொகுப்புகளை ஹம்போல்ட்டிடம் ஜோசப் பேங்க்ஸ் காட்டினார். இந்த அறிவுபூர்வமான சந்திப்பு பேங்க்ஸ் மறையும்வரை தொடர்ந்தது. ஹம்போல்ட்டுக்குப் பல்துறை அறிவுஜீவிகளை பேங்க்ஸ் அறிமுகப்படுத்தினார். ஹம்போல்ட் ஒரு பல்துறை நிபுணராக உருவாக இது வழிவகுத்தது. இந்தக் காலத்தில் புவியியல் படிப்பை முடித்தபின் அரசின் சுரங்கம் ஒன்றின் ஆய்வாளராக ஹம்போல்ட் பணிபுரிந்தார். அந்தப் பணிக்காலத்தில் தனக்குக் கிடைத்த புதைபடிவங்களைக்கொண்டு தனது முதல் ஆய்வுக் கட்டுரையை (‘Mineralogic Observations on Several Basalts on the River Rhine’) வெளியிட்டார்.

ஆளுமைகளின் சந்திப்பு – சிந்தனை ஊக்கம்

ஜெர்மனியின் மகத்தான கவிஞரான கதே, இளைய தலைமுறை அறிவியலாளர்களுடன் உரையாடுவதை விருப்பத்திற்குரிய செயல்பாடாகக் கடைப்பிடித்துவந்தார். அதன் ஒரு பகுதியாக ஹம்போல்ட் – கதே சந்திப்பும் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கிடைத்த கருத்துகள், அவரது அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தன. இயற்கையை இலக்கியத்துடன் இணைத்த ஹம்போல்ட்டின் எழுத்துகளை முதன்முதலாக வடிவமைப்பதற்கு, இது பெரிதும் உதவியாக இருந்தது. அன்றைய ஜெர்மனியின் இலக்கியம், பண்பாட்டு நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்றிருந்த அமைப்பான ‘வெய்மர் செவ்வியல் குழு’வில் உறுப்பினராகி, மேலும் பல புதிய பரிமாண அணுகுமுறைகளை ஹம்போல்ட் உள்வாங்கிக்கொண்டார். பயணம் மூலமாகத் தான் பெற்ற அனுபவங்களை இலக்கிய, தத்துவப் படைப்புகளுக்குப் பகிர்ந்துகொண்டார்.

அவருடைய தாய் இறந்த 1796-ம் ஆண்டில், ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இயற்கை அமைப்பு குறித்த தரவுகளை ஹம்போல்ட் சேகரித்துக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் தனது அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் “அண்ணா.. நீ இப்பொழுது உண்மையாகவே நான் செய்யும் செயல் குறித்து மகிழ்ச்சியடைவாய் என நினைக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இருவராலும் தங்களுடைய தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.

அதன் பிறகு அண்ணனைச் சந்திக்க ஹம்போல்ட் பாரிஸ் சென்றார். அன்றைய அறிவுசார் செயல்பாடுகளின் தலைநகரமாக பாரிஸ் திகழ்ந்தது. இயல்பாகவே அறிவுவேட்கை மிகுந்த ஹம்போல்ட்டுக்கு, அது மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தனது ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் கனிம வளத்தை ஆய்வுசெய்வதற்கும், தாவரங்களின் மாதிரிகளைச் சேகரிப்பதற்குமான பயணத்துக்கு நிதியுதவி அளித்து, ஹம்போல்ட்டையும் அவரது வாழ்நாள் நண்பராகப் பின்னாளில் மாறிய பான்பிளாண்டையும் வெனிசுலாவுக்கு, ஸ்பானிய அரசு அனுப்பியது.

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வெனிசுலா. பின்னாளில் தென்னமெரிக்கா மிகப் பெரிய சமூக, அரசியல், பொருளாதாரரீதியான மாற்றங்களை எதிர்கொள்வதற்கான தொடக்கப் புள்ளியாக இந்தப் பயணம் மாறியது.

(தொடரும்)

- செ.கா., கட்டுரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: erodetnsf@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in