

நேர்கண்டவர்: மார்க் பெகாஃப், தமிழில்: சு. அருண் பிரசாத்
நெதர்லாந்தைச் சேர்ந்த ஏவா மேய்யர் (Eva Meijer) ஒரு கலைஞர், எழுத்தாளர், தத்துவவியலாளர், பாடலாசிரியர்-பாடகர். நாவல், சிறுகதை, கட்டுரை என இதுவரை எட்டு நூல்களை மேய்யர் எழுதியுள்ளார். ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவருடைய நூல்கள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன.
மனிதர்கள் அல்லாத விலங்குகளின் (nonhuman animals) மொழி குறித்த இவருடைய ‘விலங்கு மொழிகள்’ (Animal Languages: The Secret Conversations of the Living World) நூல் 2016-ல் வெளியானது; ‘விலங்குகள் பேசும்போது’ (When Animals Speak: Toward an Interspecies Democracy) என்ற இவருடைய முதல் ஆய்வு நூல் நியூ யார்க் யுனிவர்சிடி பிரஸ் வெளியீடாகக் கடந்த ஆண்டு வெளியானது. இந்த நூல் குறித்து, ‘சைகாலஜி டுடே’ இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இருந்து:
‘விலங்கு மொழிகள்’ நூலை நீங்கள் எழுதியதற்கான காரணம்?
‘விலங்குகள் பேசும்போது’ என்ற என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், விலங்குகளின் அரசியல் குரல் குறித்த தத்துவார்த்தக் கோட்பாட்டை உருவாக்கினேன். தத்துவக் கோட்பாடு, அரசியல் பயிற்சி ஆகிய திறன்கள் இணைந்த மொழி, அரசியல் செயல்பாடு ஆகியவற்றை மனிதர்களைத் தவிர்த்த விலங்குகள் மேற்கொள்வது இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், நான் கண்டுணர்ந்த, அனுபவபூர்வமான ஆராய்ச்சி முடிவுகள் இக்கருத்துக்கு நேரெதிராக உள்ளன.
‘விலங்குகள் பேசும்போது’ நூலில், விலங்குகள் எப்படிப் பேசுகின்றன, அரசியல்ரீதியாகச் செயல்படுகின்றன என்பதை ஆய்வுசெய்துள்ளேன்; மனிதர்கள் இதைக் கவனத்தில் கொள்வதன்மூலம், விலங்கினங்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தி அரசியல்ரீதியிலான உறவுகளை அவற்றுடன் உருவாக்கிக்கொள்ள முடியும்.
நான் ஆய்வுக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது இலக்கணம், பாவனைகள் உள்ளிட்டவை சார்ந்து மனிதர்கள் அல்லாத விலங்குகளின் மொழியியல் சாத்தியங்களைப் பற்றிய ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்தேன்.
ஓங்கில்கள், கிளிகள், வௌவால்கள் மற்றவற்றைப் பெயர் சொல்லி அழைக்கின்றன. பறவைகள் சிலவற்றின் பாடல்கள், திமிங்கலங்கள், கணவாய் மீனின் தோல் அமைப்பு ஆகியவற்றில் இலக்கணக் கட்டுமானம் இருப்பதைப் கண்டறிந்துள்ளோம். குறியீடுகள், செய்கைகள் ஆகியவை மூலம் மனிதர்களுடன் குதிரைகள் பேசுகின்றன. ஊடுருவுபவர்களின் அங்க அடையாளங்கள், அவர்கள் அணிந்திருந்த சட்டையின் நிறம் ஆகியவற்றை பிரீய்ரீ புல்வெளியில் உள்ள நாய்கள் வர்ணிக்கின்றன.
மனிதர்கள் அல்லாத விலங்குகளின் உளவியல் வாழ்வு (inner life), பண்பாடு பற்றி இதுவரை நம்மிடையே ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துகளையும், ‘மனிதர்கள்’ என்பவர்களைப் பற்றிய பார்வைகளையும் இந்த ஆய்வுகள் கேள்விக்குறியாக்குகின்றன. மனிதர்களை வரையறுக்கும் முக்கியப் பண்பாக மொழி நீண்டகாலமாகக் கருதப்பட்டுவந்தது.
மற்ற விலங்குகளுடனான மனிதர்களின் உறவுகள், நெறிமுறை - அரசியல் சார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. மனிதர்கள் அல்லாத விலங்குகள், நமக்குப் பொதுவான சுற்றுச்சூழல் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவற்றுடனான உறவுகளைத் தீர்மானிப்பதற்கு அவற்றின் விருப்பங்களை மட்டுமல்லாமல் அவற்றின் பார்வைகளையும் (perspectives) நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். இந்தக் கேள்விகள் கல்விப் புலத்துக்கு மட்டுமானவை அல்ல; அனைவருக்கும் பொருந்தக்கூடியவை. எனவே, இது குறித்த நூல் ஒன்றைப் பொது வாசகர்களுக்காக எழுத முடிவெடுத்தேன்.
யாரையெல்லாம் மனத்தில் வைத்து இதை எழுதினீர்கள்?
விலங்கு மொழிகளில் நிறையப் பேர் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். விலங்குகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றின்மீது அக்கறை கொண்டிருப்பவர்கள்; விலங்குகளுடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், அவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள்; விலங்குகளின் உரிமைகளுக்காகக் கொள்கை வகுப்பவர்கள், அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இவர்களில் முதன்மையானவர்கள். அடிப்படையில் விலங்குகளின் உளவியல் வாழ்வு குறித்து அறிந்துகொள்ள விரும்பும் எல்லோருக்குமாக இதை எழுதியிருக்கிறேன். மனிதர் அல்லாத விலங்குகள் குறித்த அக்கறை சிறிதளவுகூட இல்லாதவர்களுக்கும் இந்த நூல் பொருந்தும்.
ஏனென்றால், மற்ற விலங்குகள் நாம் புறக்கணிக்கக்கூடியவை அல்ல என்ற பார்வையை இந்த நூல் வழங்குகிறது. தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டு மனிதர்களிடமும் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் விலங்குகளுடன், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தப் புவியை நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் புவியில் விலங்குகளின் வாழ்க்கை, தொடர்புகள், வாழ்விடங்கள் ஆகியவற்றில் தாக்கம்செலுத்தும் முடிவுகளை எடுக்கும்போது, நீதிக்கான காரணங்களுக்காக, அவற்றின் பார்வையையும் நாம் கணக்கில் கொண்டாகவேண்டும்.
நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் மற்ற துறைகளுடன் இது எப்படிப் பொருந்தியது?
ஒரு அரசியல் தத்துவவியலாளராக, மொழியும் சமூகநீதியும் இணையும் புள்ளியில் என்னுடைய ஆய்வுகள் கவனம் கொண்டிருக்கின்றன; நான் ஒரு நாவலாசிரியரும்கூட. மொழிக்கும் அர்த்தத்துக்கும் இடையிலான தொடர்பு, பொது உலகைக் கட்டமைப்பதில் மொழியின் பங்கு ஆகியவற்றைச் சார்ந்து எப்போதும் கவனம் செலுத்திவந்திருக்கிறேன்.
உங்கள் கண்டறிதலில் முக்கியமான செய்திகள் என்னென்ன?
விலங்குகள் பேசும்; மேம்பட்ட வழிகளில் அதைக் கவனிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பன்மை இனச் சமூகங்களைப் (multispecies communities) புதிதாக உருவாக்குவதற்கு, மனிதர்களின் நுண்ணறிவும், அவர்களுக்கு மட்டுமே தேவையான பொருட்களும் போதாது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பேசுவதற்கு விலங்குகளை நாம் அனுமதிக்க வேண்டும்; வெவ்வேறு வழிகளில் அவற்றோடு நாம் தொடர்புகொண்டாக வேண்டும்.
தத்துவார்த்த அளவில், இது சார்ந்த கேள்விகளைத் மாற்றியமைப்பதற்கான நேரம் என்று நான் வாதிடுவேன். விலங்குகளின் மொழி மனித மொழியுடன் எந்த அளவுக்கு ஒப்புமை கொண்டிருக்கிறது, ‘மொழி’ என்று அதை வழங்கலாமா என்பன போன்ற விவாதங்களை விடுத்து, பன்மை இன வழிகளில் மொழி என்ற கருத்தாக்கத்தை மறுவரையறை செய்வது குறித்த கேள்விகளை அனுபவ அடிப்படையிலான புதிய ஆய்வுகள் முன்வைக்கின்றன. இதுகுறித்து மேற்கொண்டு ஆய்வுசெய்வதற்காக விட்ஜென்ஸ்டீன் (Wittgenstein), தெரிதா (Derrida) ஆகியோரின் பணிகளை நான் சார்ந்திருக்கிறேன்.
இந்தத் தலைப்பு சார்ந்த மற்ற நூல்களில் இருந்து உங்களுடைய நூல் எப்படி வேறுபடுகிறது?
மனிதர்கள் அல்லாத விலங்குகள், அவற்றின் மொழிகள் ஆகியவற்றை உயிரியல்ரீதியில் அணுகும் நூல்கள் இருக்கின்றன; தத்துவார்த்த ரீதியில் அணுகும் ஆய்வுகள் இல்லை. மொழி என்பதை மனிதர்களின் மொழியாகவே மொழியியல் தத்துவவியலாளர்கள் அணுகிவந்துள்ளனர்.
விலங்குகளுக்கான சிறப்பான உலகை உருவாக்குவது மிகப் பெரிய காரியமாக, இயலாத ஒன்றாகத் தோன்றலாம்; மிகப் பெரிய அளவிலான சமூக மறுசீரமைப்பை அது கோருகிறது என்பது உண்மைதான். இருந்தபோதிலும், இந்தக் காலகட்டத்தில் மற்ற விலங்குகளுடன் தொடர்புகொள்வதற்கான முயற்சிகளைச் சிறிய அளவிலிருந்து மனிதர்களான நாம் தொடங்க வேண்டும்.
மற்ற விலங்குகளுக்கும் இந்த உலகம் சிறப்பானதாக உருவாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, நாம் அவற்றிடம் பேச வேண்டும்; அதிர்ஷ்டவசமாகப் பெரும்பாலான நேரம் நம்முடன் பேசுவதற்கு அவை தயாராக இருக்கின்றன.