Published : 10 Mar 2020 11:45 am

Updated : 10 Mar 2020 11:45 am

 

Published : 10 Mar 2020 11:45 AM
Last Updated : 10 Mar 2020 11:45 AM

கலைஞர்களைப் போலவே வாழ்க்கைக்கான பதில்களையே அறிவியலாளர்களும் தேடுகிறார்கள்: சந்திரிமா சாஹா நேர்காணல்

chandrima-saha-interview

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு கவனிக்கப்படத் தொடங்கியுள்ளதற்கான ஓர் அடையாளம் சந்திரிமா சாஹா. 1935-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் அனைத்து அறிவியல், தொழில்நுட்ப அறிவியலாளர்களின் தலைமை அமைப்பு, இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy). இந்த அமைப்பின் முதல் பெண் தலைவராகப் பொறுபேற்றிருக்கும் சந்திரிமா சாஹா, ஓர் உயிரியலாளர். தேசிய நோய் தடுப்புத்திறன் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக ஓய்வுபெற்ற அவர், உலக அறிவியல் அகாடமி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவியல் ஆலோசனைக் குழு என பல்வேறு மதிப்புமிக்க அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து:

உங்கள் தாய் ஓர் ஓவியர், தந்தை ஒளிப்படக் கலைஞர். உங்களுக்கு எப்படி அறிவியல் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது? சிறுவயதில் இருந்தே இந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா?


குழந்தைகள் இயல்பாகவே அவர்களுடைய பெற்றோர்களின் செயல்பாட்டிலிருந்து தாக்கம் பெறுவார்கள். ஓவியமும் ஒளிப்படமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன. அதனால், இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். அறிவியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த என் அப்பாதான், என்னில் அறிவியல் ஆர்வத்தை தூண்டினார். பொருட்களைப் பற்றி ஆர்வம் கொள்வது, இயற்கையை, நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பார்ப்பது, கவனிப்பது உள்ளிட்டவற்றை என் தந்தையே எனக்குக் கற்றுக்கொடுத்தார்.

தந்தைதான் உங்களுடைய முன்மாதிரி, இல்லையா?

ஆமாம். அவர்தான் என்னுடைய முன்மாதிரி. ஒரு சிறிய தொலைநோக்கி ஒன்றை எனக்கு வாங்கிக்கொடுத்தார். அதைக்கொண்டு விண்மீன்களைப் பார்த்தேன். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகி வந்தது என்பதை அப்பா விளக்கினார். விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தேன்; வானியலில் தீவிர வேட்கையும் கொண்டிருந்தேன். சிறிது காலம் கழித்து, நுண்ணோக்கி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதைக் கொண்டு குளத்து நீரின் சில துளிகளை உற்றுநோக்கினேன். ஆச்சரியமூட்டும் வாழ்க்கை அதில் இருப்பதைக் கண்டு, நுண்ணோக்கியின் மூலம் மிகச் சிறிய உயிரினங்களை ஆய்வுசெய்யும் உயிரியலாளராக வேண்டும் என்று என் மனதை மாற்றிக் கொண்டேன். பிற்காலத்தில் அத்துறையிலேயே கால்பதிக்கவும் செய்தேன்.

நீங்கள் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறீர்கள்? ஆனால், ஏன் விளையாட்டை உங்கள் வாழ்க்கைப் பணியாக தேர்வு செய்யவில்லை?

மேற்கு வங்க மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருக்கிறேன். படிப்பு காரணமாகத் தொடர்ந்து அதில் ஈடுபட இயலவில்லை. ஆனால், அது மிகச் சிறந்த, மறக்கமுடியாத காலம். தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டுவந்த போதிலும், சின்ன வயதில் அறிவியலில் எனக்கு ஏற்பட்ட தீவிர ஈடுபாடு, மற்றதையெல்லாம் மீறி மேலெழுந்துவிட்டது. ஆனால், இப்போதும் விளையாட்டில் விருப்பத்துடனே இருக்கிறேன்.

எல்லா வகையான பொருட்களையும் கொண்டு உங்கள் வீட்டில் சிறிய காட்சியகம் ஒன்றை சிறு வயதில் நீங்கள் உருவாக்கியதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அதன் மூலம் வீட்டில் இருந்தவர்களுக்குத் தொல்லையும் ஏற்பட்டிருக்கிறது...

ஆமாம், பூச்சிகளைச் சேகரிப்பதில் ஈடுபாட்டுடன் இருந்தேன். என்னுடைய காட்சியகத்தில் பட்டுப்புழுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அவற்றைப் பார்ப்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. சாதாரண கம்பளிப்பூச்சிகள், ஒரு கட்டத்தில் உருமாற்றத்துக்கு உள்ளாகின்றன; சில நாட்களின் முடிவில் வண்ணத்துப்பூச்சியாக மாறிப் பறக்கத் தொடங்கின. இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தவே, பல்வேறு வகையான கம்பளிப்பூச்சிகளைச் சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றேன். அதற்கடுத்து பாம்புகளைப் பிடிக்கத் தொடங்கினேன்.

அவற்றைக் கண்டு அஞ்சவில்லையா?

ஊர்வனவற்றை அதிகம் விரும்பினேன். பாம்பு பிடிக்கும் என்னுடைய நண்பனிடம் இருந்து பாம்புகளைப் பெற்று வீட்டுக்குக் கொண்டுவருவேன். அதனால் என் தாய் தொந்தரவுக்கு உள்ளானார். ஆனால், அவை நஞ்சுள்ள பாம்புகள் அல்ல.

உற்றுநோக்குதல், தரவு சேகரித்தல் என்று நீங்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும்போது, பிறக்கும்போதே நீங்கள் ஒரு அறிவியலாளராகப் பிறந்தவர் என்று சொல்லத் தோன்றுகிறது. மேற்கண்ட அனுபவங்கள் பிற்காலத்தில் எந்த வகையில் உதவின?

வாழ்க்கையைத் திரும்பிப் பார்த் தால், பல விஷயங்கள் உங்களுக்கு உதவியிருக்கும். நான் பிறக்கும்போதே நிச்சயமாக அறிவியலாளராகப் பிறக்கவில்லை. ஆனால், அதற்கான ஈடுபாடு எனக்குள் உருவானது. அறிவியல் குறித்த கேள்விகளை எழுப்ப, என் முன்அனுபவங்கள் உதவின. பிற்காலத்தில், ஆய்வுக்கூடத்தை நடத்தவேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தபோது, கிரிக்கெட்டில் நான் பெற்ற அனுபவம் பெரிதும் கைகொடுத்தது. ஒரு குழுவாக நீங்கள் இயங்கும்போது, குழு உணர்வு மேலெழும். அறிவியலிலும் அது முக்கியம். என் பெற்றோரிடம் இருந்து பெற்ற கற்பனைத் திறனும் கலையும் உதவின. அறிவியலுக்குக் கற்பனைத்திறனும் அவசியம்தானே.

அறிவியல் - கலைத் துறைகளுக்குத் தேவைப்படும் கற்பனைத் திறன், மேம்பட்ட அறிவியலாளராக ஆவதற்கு உங்களுக்கு உதவியிருப்பதாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக. அறிவியலாளர்களும் கலைஞர்களும் திறந்த மனத்துடன் விசாரணை செய்கிறவர்கள். ஆகவே, பல்வேறு வழிகளில் அவர்கள் ஒப்புமை கொண்டவர்கள். இருவருமே வாழ்க்கையின் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுபவர்கள். எனவே, அவர்கள் ஒப்புமை கொண்டவர்கள் என்றே நான் நினைக்கிறேன். விசாரணையின் விவரிப்புகள் வேண்டுமானால் வேறுபடலாம், ஆனால், இரு தரப்பினரும் வேறுபட்டவர்கள் அல்ல.

சி.பி. ஸ்நோ எழுதிய ‘இரண்டு பண்பாடுகள்’ நூலை வாசித்திருக்கிறீர்களா? ஒன்றை ஒன்று அறிந்திராத, சம அளவு கற்பனைத்திறன் கொண்ட இரண்டு பிரபஞ்சங்களைப் பற்றி அதில் அவர் பேசுகிறார்.

அறிவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே இப்போது நிறைய உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவர்கள் இணைந்து பணியாற்றவும் தொடங்கியுள்ளனர். ஏனென்றால், அறிவியலாளரைவிடவும் ஒரு கலைஞன் சமூகத்துடன் எளிதில் உறவாட முடியும். அறிவியலாளர்கள் எப்போதும் கண்ணாடி அறைக்குள்ளே, புரிந்துகொள்வதற்கு கடினமானவற்றைச் செய்துகொண்டிருப்பவர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, செல் இறப்பு (Cell Death) பற்றி நான் ஆய்வுசெய்கிறேன். பொதுமக்கள் அதை எளிதாகப் புரிந்துகொள்ளும்படி, ஓவியரின் பார்வையில் (artist’s perception) உருவான செல் இறப்பு குறித்த ஓவியங்கள் வரத் தொடங்கிவிட்டன. எனவே, கலைக்கும் அறிவியலுக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக இருப்பதாகவே நினைக்கிறேன். ஒன்றின் மதிப்பை மற்றொன்று சரியாக உள்வாங்கிக்கொள்ளும்போது (appreciate), இரண்டையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

அமெரிக்காவுக்கு எதற்காகச் சென்றீர்கள்? நீங்கள் விரும்பிய முறையில் இந்தியாவில் பயில முடியாது என்று நினைத்தீர்களா அல்லது அங்கு செல்ல வேண்டும் என்கிற ஈர்ப்பா?

ஈர்ப்பு என்று சொல்வதற்கில்லை. ஆனால், அமெரிக்காவில் மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள், மிகச் சிறந்த பயிற்சியை வழங்கின. புதுச் செய்திகளை குறித்த அறிமுகம் அங்கு அதிகம் கிடைக்கிறது. மிகச் சிறந்த நபர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். நம்முடைய கேள்விகளும் பதில்களும் மிகவும் கறாராக உற்றுநோக்கப்படும்; அவை இரண்டும் ஒன்றோடொன்று பொருந்த வேண்டும். அந்த மாதிரியான பயிற்சி அவசியம். ஆனால், அந்நாட்களில் இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சி அத்தகைய தரத்துடன் இல்லை. வெளிநாடு செல்லும் தேவை இல்லாத அளவுக்கு, இப்போது மிக நல்ல ஆய்வுக்கூடங்கள் இங்கு வந்துவிட்டன.

அறிவியல் துறையில் அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு முக்கியம்?

அறிவியலில் ஈடுபடுவதற்கு மிகச் சரியான வார்த்தை அர்ப்பணிப்புதான். நீங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லையென்றாலும், உங்கள் சிந்தனை முழுக்க ஆய்வுகளைப் பற்றியே இருக்க வேண்டும். அதே வேளையில், ஆய்வுக்கூட வாழ்க்கை என்பது, நீங்கள் விரும்பியதைச் செய்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும். ஏமாற்றங்களும் இருக்கும்; ஆனால், மகிழ்ச்சிகரமான சாதனைகளும் ஏராளம் உண்டு.

அறிவியலுக்கு அழகு உண்டு என்றால், அறிவியலுக்கு அழகியலும் உண்டா?

கட்டற்ற அழகியலை அறிவியல் கொண்டிருக்கிறது. மலைப் பகுதி ஒன்றிலோ கடற்கரையிலோ இயற்கையின் அழகை நீங்கள் ரசிப்பதைப் போல், அறிவியலின் அழகையும் நீங்கள் ரசிக்கலாம். அதுதான் அறிவியலை நோக்கி மக்களை ஈர்க்கிறது. நம் உடம்பிலும் அத்தனை அழகிருக்கிறது... ஏன் மிகச் சிறிய உயிரினங்களிலும்கூட. அது ஆழம் காண முடியாதது (unfathomable).

பெண்கள் அறிவியலில் ஈடுபடுவதற்கு, சமூகத் தடைகள் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. உங்கள் அறிவியல் பணி வாழ்க்கையில் சமூக அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

உன் எல்லை இதுதான் என்று யாரும் என்னிடம் கூறியதில்லை. வாழ்க்கையில் நாம் விரும்பியதைச் செய்வதற்கு ஆண்-பெண் என்ற பேதமின்றி அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் தேவை. உண்மையில் பாலின வேறுபாடு சமூகக் கற்பிதம்தானே. பெண்கள் தங்கள் கற்பனைத் திறனை வெளிப்படுத்துவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்து, நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். சமூகத்திடம் இருந்து அவர்களுக்குப் பாராட்டைப் பெற்றுத்தர வேண்டும். அதுதான் முக்கியம்.

பெண்களுக்கு உங்களுடைய செய்தி என்ன?

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; அறிவியல் துறையில் ஈடுபடுவது இன்பம் தரக்கூடியது என்று நம்புங்கள். அறிவியல் அழகும் ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டது. எனவே, உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொள்ள முடியும். அறிவியலில் ஈடுபடுவதன் மூலம் திருப்திகரமான வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்; வாழ்க்கையின் முடிவை நீங்கள் எட்டும்போது, வாழ்க்கை முழுக்க அறிவியலின் அழகில் நீங்கள் ஈடுபட்டுத் திளைத்ததை நினைத்துப் பெருமிதம் கொள்வீர்கள்.

நன்றி: ‘Scientifically Yours: Selected Indian Women Scientists' நூல், விஞ்ஞான் பிரச்சார். n நேர்கண்டவர்: கௌஹர் ரஸா, தமிழில்: சு. அருண் பிரசாத்

வாழ்க்கைக்கான பதில்கள்அறிவியலாளர்கள் தேடல்உற்றுநோக்குதல்தரவு சேகரித்தல்விளையாட்டிலும் ஆர்வாசந்திரிமா சாஹா நேர்காணல்அறிவியல் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x