Published : 10 Mar 2020 11:44 AM
Last Updated : 10 Mar 2020 11:44 AM

வானளந்த பெண்கள்: ஹப்பிள் தொலைநோக்கியின் அன்னை!

ஹப்பிள் தொலைநோக்கியின் அன்னை!

நான்சி கிரேஸ் ரோமன்

அறிவியல் துறையில் ஈடுபட வேண்டும் என்று பெண்கள் பரவலாகச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே, ஒரு வானியலாளராக வேண்டும் என்று கனவு கண்டவர் நான்சி கிரேஸ் ரோமன். 1925-ல் அமெரிக்காவில் பிறந்த நான்சி, பதினோரு வயதில் தன்னுடைய நண்பர்களுக்காக வீட்டின் பின்புறத்தில் வானியல் கழகம் ஒன்றை நிறுவியவர். சிகாகோ பல்கலைக்கழத்தில் வானியலில் முனைவர் பட்ட ஆய்வை 1949-ல் முடித்த நான்சி, வானியலுக்கான நாஸாவின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

நட்சத்திரங்களின் மின்காந்தக் கதிர்வீச்சுகளில் இருந்து வரும் அகச்சிவப்பு, காமா உள்ளிட்ட அலைகளைப் புவியின் வளிமண்டலம் எப்படித் தடுத்து நிறுத்துகிறது என்பதை ஆய்வுசெய்தது ஹப்பிள் தொலைநோக்கி. இதுபோன்ற சுற்றுவட்டத் தொலைநோக்கிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட முன்னோடிகளில் நான்சியும் ஒருவர். விண்மீன்களை ஆராயும் எண்ணற்ற வானியலாளர்களுக்கு இவருடைய முயற்சிகள் முதன்மை வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

பிரபஞ்ச வரைபடத்தைத் தீட்டியவர்

மார்கரெட் ஜெ. கெல்லர்

இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது. ஆனால், மனிதர்கள் அதைப் புரிந்துகோள்ளும் அளவுக்குச் சுருக்கமாக்கிக் காட்ட மார்கரெட் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுக்கும் அளவுக்குப் பெரியது அல்ல! பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தையும் வரைபடத்தில் கொண்டுவருவதே தொடக்கத்தில் இருந்தே அவருடைய குறிக்கோளாக இருந்தது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மார்கரெட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

ஸ்மித்சோனியன் வானியல் ஆய்வகத்தில் தலைமை அறிவியலாளராகப் பணியாற்றும் மார்கரெட், நம்முடைய பால்வெளி மண்டலம் உள்ளிட்ட விண்மீன் திரள்களை ஆய்வுசெய்துவருகிறார். கருப்பொருளின் பகிர்வை வரைவதன் மூலம், பிரபஞ்சம் குறித்த மேம்பட்ட புரிதலை உருவாக்குவதற்கான பணியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.

அயலாள்களைத் தேடியவர்

ஜில் டார்டெர்

பிரபஞ்சத்தில் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்று மனிதர்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்க வானியலாளர் ஜில் டார்டெரோ, தன் வாழ்நாளையே இந்தக் கேள்விக்குப் பதில் காண அர்ப்பணித்திருக்கிறார்.

கார்ல் சகனின் ‘கான்டாக்ட்’ நாவலில் வரும் எலி ஆரவே-வைப் போல், அயலாள்களைத் தேடும் முயற்சிகளுக்காகப் பல பதிற்றாண்டுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். என்றாலும், அயலாள்களைப் பற்றிய அறிவியல்பூர்வமான தேடலை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

விண்மீன் திரள் விடை கண்டவர்

சாண்ட்ரா ஃபேபர்

பிரபஞ்சம் என்பது என்ன, அது எப்படி இங்கு வந்தது? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தன் வாழ்நாள் முழுக்க அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து, வானியல் இயற்பியலாளர்கள் வானத்தைப் பார்க்கும் வழிமுறையை மாற்றியமைத்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த சாண்ட்ரா ஃபேபர். பிரபஞ்சத்தின் கட்டமைப்பு எப்படிப் பரிணாமம் பெற்று வந்தது, எப்படி விண்மீன் திரள்கள் உருவாயின என்பது உள்ளிட்ட ஃபேபரின் ஆராய்ச்சிகள் பல பதிற்றாண்டுகளுக்கு நீண்டவை.

விண்மீன்களின் வேகத்தை, அவற்றின் வெளிச்சத்துடன் தொடர்புபடுத்தி, மற்ற விண்மீன் திரள்களில் இருந்து ஒரு விண்மீன் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று நிர்ணயிக்கும் முறையை ஜேக்ஸன் என்பவருடன் இணைந்து ஃபேபர் கண்டறிந்தார். இது ஃபேபர்-ஜேக்ஸன் தொடர்பு என்று வானியலில் அழைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x