

‘மென்டல் ஃப்ளாஸ்’ (Mental Floss) என்ற யூடியூப் அலைவரிசை 2011-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அமெரிக்காவின் டிஜிட்டல் இதழான ‘மென்டல் ஃப்ளாஸி’ன் யூடியூப் பதிப்பு இந்த அலைவரிசை. வரலாறு, அறிவியல், பண்பாடுத் தொடர்பான சுவாரசியமான தகவல்களை இந்த அலைவரிசை பகிர்ந்துகொள்கிறது.
இந்த அலைவரிசையில் மாதம் இரண்டு முறை பதிவேற்றப்படும் ‘லிஸ்ட் ஷோ’ பிரபலமானது. அறிவியல், வரலாறு தொடர்பான தவறான கற்பிதங்களைக் கண்டறிந்து இந்த அலைவரிசை சுட்டிக்காட்டுகிறது. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உணவு வரலாறு, விலங்குகள், திரைப்படங்கள், புத்தகங்கள் தொடர்பான எண்ணற்ற தகவல்கள் இந்த அலைவரிசையில் இடம்பெற்றுள்ளன.
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/3clxhAj
- கனி
நுட்பத் தீர்வு: வீட்டில் எதற்கு பிராட்பேண்ட்?
சாதாரணமாக மின்னஞ்சல் போன்றவற்றுக்காக வீட்டிலும் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பவர்கள் உண்டு. அதிகமாகப் பயன்பாடு இல்லாவிட்டால் பிராட்பேண்ட் இணைப்பு வீட்டுக்கு அவசியமில்லை. உங்கள் மொபைல் டேட்டாவையே வீட்டில் உள்ள கணினிக்கோ மடிக்கணினிக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொபைல் டேட்டாவை ஆன் செய்துவிட்டு மொபைலைக் கணினி/மடிக் கணினியுடன் யுஎஸ்பி கேபிள் மூலம் இணைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது மொபைலில் செட்டிங்க்ஸைப் பயன்படுத்தி யுஎஸ்பி டெதரிங் என்பதை enable செய்துகொண்டால் போதும். உங்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி கணினி/மடிக் கணினியில் ப்ரௌஸ் செய்துகொள்ளலாம். கணினி/ மடிக் கணியில் வைஃபை இல்லாதவர்களுக்கு இந்த வழிமுறை பேரளவில் உதவும்.
- ரிஷி
செயலி புதிது - Todoist: To-Do List, Tasks & Reminders
அடுத்த நாளுக்கான வேலைகளை நினைத்துக்கொண்டு இரவு உறங்கச் செல்வோம். அதேபோல் குறிப்பிட்ட நாளில் வேலை ஒன்றைத் திட்டமிட்டிருப்போம். ஆனால், நம் அன்றாட வேலைகளில் இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். ஆகவே, கண்ட இடங்களில் குறிப்புகளைச் சிலர் குறித்து வைப்பர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது Todoist செயலி. இன்ன நேரத்தில் அல்லது தேதியில் இவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்று இந்தச் செயலியில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். அன்றாடக் கடமைகள், வாராந்திரச் செயல்பாடுகள், மாதாந்திரத் திட்டங்கள் போன்றவற்றையும் இச்செயலி நினைவுபடுத்தும்.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த அளவு முன்னேறியிருக்கிறீற்கள் என்பதை பரிசோதித்துக்கொள்ளும் வசதியும் இதில் உண்டு.
- நந்து