Published : 03 Mar 2020 08:12 AM
Last Updated : 03 Mar 2020 08:12 AM

அறிவியலும் பெண்களும்: சில நூல்கள்

சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படும் இந்த வேளையில் சமீபத்தில் வெளியான அறிவியல் துறையில் பெண்கள், பெண்கள் எழுதிய அறிவியல் நூல்கள் சில:

Women Scientists in India: Lives, Struggles, Achievements

Anjana Chattopadhyay, National Book Trust

இந்தியாவின் முன்னோடிப் பெண் அறிவியலாளர்களைப் பற்றிய அரிய தகவல்களைச் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் முக்கியமான புத்தகம். இந்திய அறிவியல் போக்கை மாற்றிய இவர்களுடைய ஓயாத போராட்டங்கள், சாதனைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை இப்புத்தகம் வழங்குகிறது.

இந்தியர்களின் நலவாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அயல்நாட்டு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் சாகச வாழ்க்கையையும் இப்புத்தகம் அறிமுகப்படுத்துகிறது. தில்லி பொது நூலகத் துறையின் முன்னாள் இயக்குநரான முனைவர் அஞ்சனா சட்டோபாத்யாய நாளிதழ்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

Why Trust Science?

Naomi Oreskes, Princeton University Press

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று கூறும் மருத்துவர்கள் உண்மையில், அது குறித்த புரிதலைக் கொண்டிருப்பார்களா? புவி வெப்பமாதலின் விளைவுகளைப் பற்றி காலநிலை அறிவியலாளர்கள் கூறுவதற்கு நாம் காதுகொடுக்க வேண்டுமா? அரசியல்வாதிகள் அறிவியலை நம்பாதபோது, நாம் மட்டும் ஏன் நம்ப வேண்டும்? சமூகம் குறித்த அறிவியல் அறிவு ஏன் தேவை என்பதையும், அறிவியலின் மிகப் பெரிய பலத்தையும், ஆகவே அறிவியலை நாம் நம்ப வேண்டும் என்பதற்கான காரணங்களையும் இப்புத்தகத்தில் நவோமி ஒரெஸ்கிஸ் ஆழமாக விவாதித்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரையிலான வரலாறு, தத்துவத்தின் அடிப்படையில், அறிவியலில் ஒற்றை வழிமுறை கிடையாது என்ற பொது நம்பிக்கைக்கு முரணான கருத்தை முன்வைத்திருக்கிறார். காலநிலை வல்லுநர்கள், அரசியல் அறிவியலாளர், அறிவியல் தத்துவவியலாளர், அறிவியல் வரலாற்றாசிரியர் ஆகியோர் இந்தப் புத்தகத்தில் பங்களித்திருக்கிறார்கள். அரசியல் கோட்பாட்டாளர் ஸ்டீபன் மாசிடோ முன்னுரை எழுதியுள்ளார்.

Waters of the World

Sarah Dry, University of Chicago Press

பனிப்பாறைகளில் இருந்து பனிச்சிகரங்கள்வரை; கரீபியனின் குமுலோநிம்பஸ் மேகக்கூட்டங்களில் இருந்து வட அட்லாண்டிக் பெருங்கடலின் சிக்கலான நீரோட்டம்வரை பல்வேறு புள்ளிகளால் இணைக்கப்பட்ட, காலம் - இடத்தைப் பொறுத்து தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படும் புவியின் காலநிலை அமைப்பைப் படித்தறிந்த அறிவியலாளர்களைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது.

வளிமண்டலத்தில் நீராவியின் அளவைக் கண்டுபிடிக்க எரிமலைகளில் முகாமிட்டவர்கள், புவியின் பண்டைக்கால காலநிலை வரலாற்றை அறிவதற்கு அடர்த்தியான பனிப்பாளங்களை ஆய்வுசெய்தவர்கள், ஆற்றலில் ஏற்படும் சிறு மாற்றம் எத்தகையை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள பெரு மேகங்களுக்குள் பறந்தவர்கள் என திகைக்க வைக்கும் ஆய்வுகளை நிகழ்த்திய அறிவியலாளர்களின் வாழ்க்கையை சாரா டிரை இப்புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

தனித்தனிப் புதிர்களாகத் தோன்றும் இவை, ஒட்டுமொத்தமாக புவியின் காலநிலையைப் புரிந்துகொள்வதற்கு வழிசெய்கின்றன. இன்றைக்கு ‘காலநிலை அறிவியல்’ என்று அழைக்கப்படும் பெரும் துறை, இத்தகைய அறிவியலாளர்களின் தேடல்களால் உருவானதுதான். நாம் வாழும் காலத்துக்குத் தேவையான ஒரு ஆவணமாக, நாம் வாழும் கோளின் காலநிலை குறித்த மேம்பட்ட புரிதலை இப்புத்தகம் வழங்குகிறது.

Women in Science and Technology: Confronting Inequalities

lNamrata Gupta, Sage Publications

பொறியியல், மருத்துவம், இயற்கை அறிவியல், உயிரி அறிவியல், கணிதவியல் ஆகிய துறைகளின் சமீபத்திய தரவுகளைக்கொண்டு அறிவியல் - தொழில்நுட்பப் புலத்தில் பெண்களின் நிலையை இப்புத்தகம் ஆராய்ந்திருக்கிறது. அறிவியல் - தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை நிர்ணயிப்பதில், பாலியல் சார்ந்த வேறுபாடுகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியப் பங்காற்றுவதாக இப்புத்தகம் தெரிவிக்கிறது. இது வெவ்வேறு வடிவங்களில் நிகழ்கிறது. பள்ளி, கல்லூரியில் பாடங்களைத் தேர்வுசெய்வதிலிருந்து, அறிவியல் ஆராய்ச்சியில் குறிப்பிட்ட பிரிவைத் தேர்தெடுப்பதுவரை இது தொடர்கிறது.

உயர்தரக் கல்வி நிலையங்களிலும், முன்னணி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடங்களிலும் ஆராய்ச்சிகள், முன்னெற்றத்துக்கான வாய்ப்புகளில் பெண்களை விடுத்து ஆண்களை மையப்படுத்திய பண்பாடே வலுப்பெற்றுள்ளது என இந்தப் புத்தகம் நிறுவுகிறது. கல்லூரி மாணவர் சேர்க்கை, நிறுவனங்களின் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பப் புலங்களில் பெண்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்பு போன்றவற்றை கொள்கை முடிவெடுத்து அறிவிப்பதற்கு இப்புத்தகம் பரிந்துரைக்கிறது. பெண்களுக்கு இருக்கும் சமுதாய, குடும்பத் தடைகளை கூட்டுறவு, புரிதல் மூலம் களைய வேண்டும் என்றும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

தொகுப்பு: அபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x