Published : 25 Feb 2020 10:00 am

Updated : 25 Feb 2020 10:00 am

 

Published : 25 Feb 2020 10:00 AM
Last Updated : 25 Feb 2020 10:00 AM

உணவு அறிவியல் - ஓர் அறிவியல் அலசல்: மனிதர்களுக்குப் பால் ஏற்றதா?

food-science

சஹஸ்

பால் அருந்துவது நம் உடலுக்கு ஏற்றதா, ஒவ்வாததா என்ற விவாதம் பல காலமாக நடந்துகொண்டிருக்கிறது. பிறந்து குறிப்பிட்ட காலம்வரை பாலூட்டிகளின் குட்டிகள் தாயின் மடியில் சுரக்கும் பாலை உணவாகக்கொள்கின்றன. மனிதர்களும் பாலூட்டிகளே; அதேநேரம், மனிதர்கள் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை அருந்துகின்றனர். நாயும் பூனையும் மனிதர்கள் கொடுப்பதாலேயே பாலை அருந்துகின்றன.


மற்ற விலங்குகளின் பாலை மனிதர்கள் அருந்துவது இயற்கைக்கு முரணானது என்ற வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது; பால் ஒரு சத்தான உணவு. அதில் புரதம், கொழுப்பு, கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன என்று மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இதைப் புரிந்துகொள்ள, நம் உணவில் பால் இடம்பிடித்த வரலாற்றை அறிவியல்பூர்வமாக அணுகுவதில் இருந்து தொடங்கலாம். மூன்று லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனித இனம் பாலை அருந்தவில்லை. காரணம், குழந்தைப் பருவத்தில் சுரக்கும் லாக்டேஸ் (Lactase) எனும் நொதி, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை செரிக்கும். மனிதர்களுக்கு சுமார் நான்கு வயதுக்குள் லாக்டேஸ் சுரப்பது இயல்பாகவே நின்றுவிடும். அதன் பின் தாய்ப்பால்கூடச் செரிமானம் ஆகாது; விலங்குகளுக்கும் அப்படியே.

ஏன் பிரச்சினை?

12,000 ஆண்டுகளுக்குமுன், மத்திய ஆசியாவில் வாழ்ந்த மனிதர்கள் கால்நடைகளைப் பழக்கி வீட்டு விலங்குகளாக மாற்றினார்கள். முதலில் இறைச்சிக்காகவே கால்நடைகள் வளர்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் அவற்றின் பாலைப் புளிக்க வைத்துத் தயிராகவும், பாலாடைக்கட்டியாகவும் பயன்படுத்தினார்கள். பாலைப் புளிக்க வைப்பதன் மூலம் அதில் உள்ள லாக்டோஸ் என்கிற செரிமானம் ஆகாத சர்க்கரை வேதியியல் மாற்றத்துக்குள்ளானது.

லாக்டோஸை மிகக் குறைந்த அளவில் கொண்ட தயிரும், பாலாடைக்கட்டியும், வெண்ணெய்யும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஓர் அளவுக்கு மேல் பாலை நேரடியாக அருந்தினால் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. ஏனென்றால் பாலில் உள்ள லாக்டோஸ் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வயிற்றில் வாயுவை உருவாக்கி வயிற்று வலியை ஏற்படுத்துகிறது.

எப்போது வந்தது?

பாலை முதன்முதலில் நேரடியாக அருந்தியது யார் என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 6,000 வருடங்களுக்குமுன் மத்திய ஆசியாவில், லாக்டேஸ் நொதியைச் சுரக்கும் '13910T' மரபணுவில் வகைமாற்றம் நிகழ்ந்தது. இந்த மரபணுவைக் கொண்டவர்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்த பின்பும் பாலைச் செரிக்கும், லாக்டோஸ் ஏற்புத்தன்மை பெற்றவர்களாக இருந்தார்கள்; லாக்டேஸ் நொதி சுரப்பது இவர்களுக்கு நீடித்தது.

மத்திய ஆசியாவில் கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நில வாழ்க்கை முறையில் ஈடுபட்ட மக்களிடம் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வுதான், பாலைச் செரிக்கும் தன்மையான லாக்டோஸ் ஏற்புத்தன்மையை பரவலாக்கியிருக்க முடியும். மங்கோலியாவின் மேய்ச்சல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இத்தகைய மரபணுப் பிறழ்வு எதுவும் நிகழவில்லை. எனவே, அவர்கள் இன்றளவும் பாலை நேரடியாக உட்கொள்ளாமல், தயிராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.

‘13910T' மரபணுவைப் பெற்றவர்கள் முதலில் ஐரோப்பாவின் தெற்கிலும், பிறகு வடக்கிலும் குடியேறினார்கள். வெண்கல யுகத்தில்தான் (Bronze Age) ஐரோப்பாவின் சில பகுதிகளில் பால் அருந்தும் பழக்கம் உடைய சமூகத்தினர் பரவலாகத் தோன்றினார்கள். தொடக்கக் காலத்தில் ஐரோப்பியர்களில், வெறும் பத்து சதவீதத்தினருக்கு மட்டுமே லாக்டோஸ் ஏற்புத்தன்மை இருந்தது. இன்றைக்கு இங்கிலாந்து, ஸ்காண்டிநேவிய நாடுகளில் தொண்ணூறு சதவீத மக்கள் லாக்டோஸ் (சர்க்கரை) ஏற்புத்தன்மை அல்லது லாக்டேஸ் (நொதி) நீடிப்புத்தன்மை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

என்ன காரணம்?

சிலியின் ஒரு பகுதியில் வாழ்ந்துவரும் பூர்வகுடிகள் மத்தியில் லாக்டேஸ் நீடிப்புத்தன்மையைப் பெற்றுள்ளதால், பால் அருந்துவதால் இவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஐரோப்பியர்களுடன் இவர்கள் கலந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.

ஐரோப்பியர்கள் கால்சியம் சத்தைப் பெறுவதற்குப் பால் முக்கிய மூலாதாரமாக விளங்குகிறது. ஐரோப்பாவில் ஆண்டின் பெரும் பகுதியில் சூரிய ஒளி குறைவாகவே இருப்பதால், ஐரோப்பியர்கள் கால்சியம் சத்தைப் பெற சூரிய ஒளி போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஆனால், வெப்பம் மிகுந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அபரிமிதமான சூரிய ஒளி வைட்டமின் டி-யைத் தயாரிக்கவும், அதன் மூலம் கால்சியத்தைப் பெறவும் மக்களுக்கு உதவுகிறது.

எனவே, ஐரோப்பாவில் ஒரு சில மக்கள் குழுக்களில் நிகழ்ந்த ‘13910T' எனும் மரபணுப் பிறழ்வு, பால் செரிக்கும் வகையில் லாக்டேஸ் நொதி குழந்தைப் பருவம் கடந்தும் நீடிக்கும்தன்மையை உருவாக்கியது. இது உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பால் மூலம் எளிதாகப் பெறும் சூழலை உருவாக்கியது.

இந்தியாவில்...

நம் நாட்டில் பாலைச் செரிக்கும் மரபணு ‘13910T'-க்கு உரியவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் வழித்தோன்றல்களும் பின்னர் அவர்களுடன் கலந்து உருவானவர்களும் என்று அனுமானிக்கலாம்.

‘எர்லி இந்தியன்ஸ்’ நூலில் டோனி ஜோசப் இந்தியாவைப் பற்றி கீழ்க்காணும் கருத்தை முன்வைக்கிறார்: ‘இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் வாழ்கிறவர்களில் 40 சதவீதத்துக்கும் மேலாக லாக்டோஸ் ஏற்புத்தன்மையுடன் இருக்கிறார்கள். ஆனால், வடகிழக்கில் இது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் உள்ளவர்கள் மிக அதிகமாகப் பாலைப் பயன்படுத்துகிறார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது.

ஆனால், நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் ஒப்பீட்டளவில் பாலின் பயன்பாடு குறைவு என்கிறது இந்த ஆய்வு. ஆனால், மீன்-இறைச்சி உட்கொள்ளுதல் வடநாட்டைவிட இப்பகுதிகளில் அதிகம். தமிழ்நாட்டில் பால் ஒவ்வாமை உடைய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடும். பாலிலிருந்து தேவையான புரதச்சத்தைப் பெறும் வடஇந்தியர்களும், மேற்கு இந்தியர்களும் மரக்கறி உணவுப் பழக்கத்தை வலியுறுத்தக் காரணம் இதுவாகவும்கூட இருக்கலாம்.’

எப்படி அறிவது?

இந்த வகையில் இந்திய மக்களிடம் ஒரே வகையான உணவுப் பழக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அனைவருக்கும் ஒரே வகையிலான உணவு என்பது அறிவியலுக்குப் புறம்பானது. பால் மூலம் பெறப்படும் வெண்ணெய், பாலாடைக்கட்டி, தயிர் போன்றவை லாக்டோஸை மிகக் குறைந்த அளவில் கொண்டவை. இவற்றால் அனைவருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், நம் நாட்டில் சுமார் 80 சதவீதம் பேர் பாலை நேரடியாக அருந்தினால், செரிக்கும் திறனற்றவர்கள் என்பதே அறிவியல் முன்வைக்கும் உண்மை.

எனவே, பால் நம் உடலுக்கு ஏற்றதா இல்லையா என்பதை அது விளைவிக்கும் ஒவ்வாமையே காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், தேனீர் அருந்தும்போது மிகக் குறைந்த அளவே பாலைப் பயன்படுத்துவதால் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுவதில்லை.

அதற்காக, நமது உடலுக்குப் பால் ஏற்றதா, இல்லையா என்று அறிய மரபணுச் சோதனை செய்து நம் உடலில் ‘13910T' மரபணு இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் மெனக்கெட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒரு குவளைப் பால் அருந்திப் பார்த்தால் போதும்!

கட்டுரையாளர் தொடர்புக்கு: sahas.sasi@gmail.com

அறிவியல் அலசல்அறிவியல்மனிதர்கள்பால்பிரச்சினைபூர்வகுடிகள்இந்தியாஉணவு அறிவியல்Food Science

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x