விண்வெளி: முதல் சாதனைகள்!

விண்வெளி: முதல் சாதனைகள்!
Updated on
3 min read

சகோ

1961 ஏப்ரல் 12: விண்வெளியில் முதல் மனிதர்

சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி ககாரின் ‘வோஸ்டாக் 1’ விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்றார். 108 நிமிடம் விண்வெளியில் இருந்த அவர் புவியை ஒரு முறை சுற்றிவந்தார். விண்வெளியில் இருந்தபடி, “நான் புவியைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக இருக்கிறது” என்று அவர் கூறியதுதான் விண்வெளியில் உச்சரிக்கப்பட்ட முதல் வாக்கியம்.

1961 மே 5: விண்வெளியில் முதல் அமெரிக்கர்

நாசாவின் மெர்குரி திட்டத்தின்கீழ் ‘ஃபிரீடம் 7’ விண்கலத்தில் விண்வெளியை அடைந்தார் ஆலன் பி. ஷெப்பர்ட். 15 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தார்.

1963 ஜூன் 16: விண்வெளியில் முதல் பெண்

‘வோஸ்டாக் 6’ விண்கலத்தின் மூலம் சோவியத் விண்வெளி வீராங்கனை வாலெண்டினா தெரஸ்கோவா விண்வெளிக்குச் சென்றார். 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் தங்கிய அவர், 45 முறை புவியைச் சுற்றிவந்தார்.

1965 மார்ச் 18:

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் சோவியத்தின் அலெக்ஸி லியோனவ்.

1969 ஜூலை 20: நிலவில் மனிதர்கள்

அப்போலோ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் (ஜூனியர்) இருவரும் நிலவில் கால்பதித்த, நடந்த முதல் மனிதர்கள். இவர்கள் நிலவில் இறங்கியதை லட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர். நிலவில் இரண்டு மணி நேரம் இருந்த ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் ஒளிப்படங்கள் எடுத்தனர்.

நிலவில் இருந்த பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர். நிலவு பயணத்துக்கு ‘அப்போலோ 11’ விண்கலம் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் நிலவில் இருந்தபோது நிலவின் சுற்றுப்பாதையில் மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.

1981 ஏப்ரல் 12 - ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட முதல் விண்கலமான ‘கொலம்பியா விண்கலம்’, விண்வெளிக்குச் சென்று புவியைச் சுற்றிவிட்டு மீண்டும் தரையிறங்கியது. அந்த விண்கலத்தின் பயன்பாடு 2011-ல் நிறுத்தப்படுவதற்கு முன் 135 திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

1984 ஏப்ரல் 2: விண்வெளியில் முதல் இந்தியர்

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலம் ஒன்றில் விண்வெளியை அடைந்து புவியைச் சுற்றிவந்தார். இவர் எட்டு நாட்கள் ‘சால்யுட் 7’ விண்வெளி நிலையத்தில் தங்கினார்.

1997 நவம்பர் 19: விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. புவிக்குத் திரும்பக்கூடிய கொலம்பியா விண்கலத்தில் (space shuttle) விண்வெளிக்குப் பயணித்தார். விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். 2003 பிப்ரவரி 1 அன்று கொலம்பியா விண்கலம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பலியாயினர்.

1998 அக்டோபர் 29: விண்வெளிக்குச் சென்ற மிக மூத்த மனிதர்

நாசாவின் ‘டிஸ்கவரி’ விண்கலத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் விண்வெளிக்குச் சென்ற மிக முதிய மனிதர் ஆவார். அப்போது அவருக்கு வயது 77!

2001 ஏப்ரல் 28: முதல் விண்வெளிப் பயணி

ரஷ்யா, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிய ராக்கெட்டில் 2 கோடி டாலர் பணம் செலுத்திப் பயணித்தார் அமெரிக்கத் தொழிலதிபர் டென்னிஸ் டிடொ. பணம் கொடுத்து விண்வெளிக்குச் சென்றதால் இவர் முதல் விண்வெளிப் பயணி என்று அறியப்படுகிறார்.

2003 அக்டோபர் 18: விண்வெளிக்குச் சென்ற முதல் சீனர்

‘ஷென்ஸோ 5’ விண்கலத்தின் மூலம் விண்வெளியை அடைந்தார் யாங் லிவீ. இவரே விண்வெளியில் கால்பதித்த முதல் சீனர்.

2018 ஆகஸ்ட் 15: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம்

இந்தியா முதல்முறையாக 2022-ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘ககன்யான்’ (விண் நிலையம் என்று அர்த்தம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி கேளுங்கள்!

அறிவியல் சார்ந்த கேள்விகள், சந்தேகங்களை ‘ஆறாம் அறிவு’ பகுதிக்கு வாசகர்கள் அனுப்பலாம்; அறிவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் பதிலளிப்பார்கள்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

‘ஆறாம் அறிவு’ - இந்து தமிழ் நாளிதழ், 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை,
சென்னை - 02, மின்னஞ்சல்: aaraamarivu@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in