Published : 18 Feb 2020 12:31 pm

Updated : 18 Feb 2020 12:32 pm

 

Published : 18 Feb 2020 12:31 PM
Last Updated : 18 Feb 2020 12:32 PM

அறிவியல் இதழியல்: வழிகாட்டும் ‘திறந்த புத்தகம்’!

journal-of-science
சிரி கார்பென்டர்

சு. அருண் பிரசாத்

கட்டுரைக்குள் செல்லும்முன், உங்களைச் சுற்றி என்ன வெல்லாம் இருக்கின்றன என்று ஒரு முறை பார்வையைச் சுழலவிடுங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்களைச் சுற்றி எது இருந்தாலும் அதன் பின்னால் ஓர் அறிவியல் இயங்கிக்கொண்டிருக்கிறது.


அன்றாடப் பயன்பாட்டில் இருந்து விண்ணைத் தொடும் பயன்பாடுவரை அனைத்தும் அறிவியல்-தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவானவை. இவற்றின் பின்னால் இருக்கும் மிகச் சிக்கலான ஆய்வுகள், எண்ணற்ற சமன்பாடுகள் ஆகியவற்றைக் குறித்த அறிவியல் பொதுமக்களை சற்றே மிரளவைக்கும்.

அறிவியல் எழுத்து

விரிவான, துல்லியமான, தகவல்கள் நிறைந்த இத்தகைய கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் அல்லாத பொதுமக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள அறிவியல் இதழியல் வழிசெய்கிறது. அறிவியல் எழுத்து என்பது அறிவியலாளர்கள், இதழாளர்கள், பொதுமக்கள் ஆகிய மூவரின் இணைவு.

அறிவியல் இதழாளர்கள், எழுத்தாளர்களின் பணி, நவீன அறிவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை எளிமையாக விளக்குவது மட்டும் அல்ல; அறிவியலின் பிரச்சினைகள் குறித்த கூரிய, ஆழமான கருத்துகள், அரசின் அறிவியல் கொள்கை, முன்னெடுப்புகள் சார்ந்த ஆலோசனை-விமர்சனங்கள் ஆகியவற்றை வழங்குவதும்தான்.

‘திறந்த நோட்டுப்புத்தகம்’

அறிவியல் சார்ந்து எழுதும் ஒருவர், குறிப்பிட்ட துறையில் முறையான பயிற்சி பெற்றிருப்பது, அறிவியல் எழுத்தாளராவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று; சிலர் அந்த அறிவியல் துறையில் பட்டம் பெற்று, இதழியலும் கற்றிருப்பார்கள். ஆனால், உலக அளவில் அறிவியல் எழுத்தில் தற்போது ஈடுபட்டுள்ளவர்களில் வெகு சிலர்தான் முறையான அறிவியல் கல்வியையும் இதழியல் பயிற்சியையும் கொண்டிருக்கின்றனர்.

‘ஃப்ரீலான்சர்கள்’ எனப்படும் சுயாதீன இதழாளர்களின் வரவு அறிவியல் இதழியலில் சமீபத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோருக்குச் செய்தி அறையில் கிடைக்கும் இயல்பான பயிற்சி கிடைப்பதில்லை.

இந்தக் குறையைப் போக்குவதற்குத் தொடங்கப்பட்டதுதான் ‘தி ஓபன் நோட்புக்’ (www.theopennotebook.com) என்ற அறிவியல் எழுத்துக்கான வழிகாட்டி இணையதளம். அறிவியல் எழுத்தில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவின் சிரி கார்பென்டர், ஜீன் எர்ட்மான் என்ற இரண்டு பெண்களால் 2010-ல் இந்தத் தளம் தொடங்கப்பட்டது. இதுவரை 400-க்கும் அதிகமான கட்டுரைகள், அறிவியல் எழுத்தாளர்களின் பேட்டிகள், பரிசு பெற்ற கட்டுரைகளின் சுருக்கங்கள் போன்றவை இந்தத் தளத்தில் வெளியாகி உள்ளன.

சிரி கார்பென்டர்

நோட்புக்கின் பணிகள்

அறிவியல் கட்டுரைகளுக்கான யோசனைகள், கட்டுரையாக எவற்றை மாற்றுவது, அவற்றுக்கு குறிப்புகளும் தரவுகளும் சேகரிப்பது எப்படி, கட்டுரை ஒன்றைத் தொடக்கம் முதல் முடிவுவரை கொண்டுசெல்வது எப்படி என அறிவியல் எழுத்தின் அடிப்படைகளில் இருந்து, அதன் அடுத்தடுத்த நிலைகளைப் பயில ‘ஓபன் நோட்புக்’ வழிகாட்டுகிறது.

தளத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, ‘பிட்ச் டேடாபேஸ்’ அமைந்துள்ளது. பல்வேறு அறிவியல் இதழ்களில் வெளியான 200-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளின் பின்னணியையும் சுருக்கத்தையும் விளக்கி, ஒரு விஷயத்தை அணுகுவது எப்படி என்று அந்தக் கட்டுரையாளர்களின் கருத்துகளைத் தொகுத்துவழங்குகிறது இந்தத் தரவுதளம்.

தளத்தில் வெளியான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘தி கிராஃப்ட் ஆஃப் சயின்ஸ் ரைட்டிங்’ என்ற பெயரில் ‘ஓபன் நோட்புக்’ சமீபத்தில் வெளியிட்ட நூல் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முன்னணி அறிவியல் எழுத்தாளர்கள் நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் அறிவியல் எழுத்தின் அனைத்து வழிமுறைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளனர். ‘அறிவியல் எழுத்தின் பாடப்புத்தகம்’ என்று முன்னணி அறிவியல் எழுத்தாளர்களால் பாராட்டப்படும் ‘ஓபன் நோட்புக்’ தளம் சார்பில் வெளியாகியிருக்கும் இந்த நூல், சமகால அறிவியல் எழுத்தின் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

தமிழில் எப்போது?

இவை அனைத்தும் ஆங்கிலத்தை மையப்படுத்தியே பேசப்பட்டுள்ளன என்பது ஒருபுறம் இருந்தாலும், அறிவியல் எழுத்துக்கான மேற்கண்ட உத்திகள் தமிழில் பயிலப்பட வேண்டும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ் அறிவியல் எழுத்தை வரும் காலத்தில் மீட்டெடுக்க வேண்டும். சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்வெளி தொடர்பான அறிவியல் செய்திகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை, அடிப்படை அறிவியலில் இருந்து அதன் சகல பரிமாணங்களுக்கும் ஊடகங்கள் வழங்க வேண்டும். வருங்காலத்தில் தமிழிலும் இதுபோன்ற தளங்கள், செயல்பாடுகள் பரவலாகும் என்று எதிர்பார்ப்போம்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

சிக்கலான அறிவியலை விளக்கி எழுதுவது எப்படி?: கார்ல் ஸிம்மர்

பெரும்பான்மை வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத குவாசர்கள், போஸான்கள், புவியின் காந்தப் புலம், மூட்டைப்பூச்சியின் இனச்சேர்க்கை போன்ற அம்சங்கள் சார்ந்தே அறிவியல் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.

அறிவியல் எழுத்தாளர்கள் தங்களுக்குத் தெரிந்த எல்லாமும் வாசகர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தால், முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஒன்று கட்டுரையில் விடுபட்டுவிடலாம்.

சிக்கலான விஷயம் ஒன்றை விரிவாக விளக்கி எழுதும்போது, அதன் ஒவ்வொரு பகுதியும் உங்கள் சிந்தனையில் இருப்பதால், தாளில் எது விடுபட்டுள்ளது என்பதைக் கண்டறிவது சிரமம்.

ஒளியியல் தோற்றப்பிழையைப் (optical illusions) பார்ப்பதைப் போலவே உங்கள் கட்டுரையின் வரைவுகளை நீங்கள் படிப்பீர்கள். இறுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதைப் போல் கட்டுரையை முடித்துவிடுவீர்கள்.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு, துறை சாராத ஒருவரிடம் உங்கள் கட்டுரையை வாசிக்கக் கொடுங்கள்; அல்லது எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது என்ற உங்கள் எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். சிக்கலான ஒன்றை விவரிப்பதற்கு கல்லூரி செமஸ்டர் போன்ற நீண்ட அறிமுகப் பாடம் தேவை என்ற கருத்து தவறானது.

அத்தகைய பாடத்தில் நாம் நிறைய கற்றுக்கொள்வோம் என்பது உண்மைதான். என்றாலும், இதழ் அல்லது இணையதளம் ஒன்றில் நாம் வாசிக்கும் கட்டுரையில் இதை எதிர்பார்ப்பது சரியாக இருக்காது.

மாறாக, நாம் அதில் வேண்டுவது கட்டுரை அல்லது விவாதத்தையே. விஷயத்துக்கு வராமல், விவாதத்துக்கு வலு சேர்க்காமல் ஒன்றை விளக்குவதில் மட்டுமே எல்லா நேரத்தை ஒருவர் செலவழிக்கும்போது, விளக்கம் கொடுப்பதன் முக்கியத்துவத்தில் எழுத்தின் அமைப்பு சிதைந்துவிடும்.

பேசுபொருள் சார்ந்து ஒட்டுமொத்தப் புரிதலை வாசகர்கள் உருவாக்கிக்கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச விளக்கம் எது என்பதைக் கண்டறிவது, விரிவாக விளக்கி எழுதும்போது முக்கியம். விளக்கித்தான் கூறவேண்டும், வேறு வழியே இல்லை எனும்போது உவமைகளைப் பயன்படுத்தலாம்.

விளக்கக் கட்டுரை ஒன்றுக்கு அறிவியலாளர் ஒருவரை நீங்கள் பேட்டி எடுக்க நேர்ந்தால், விஷயத்தை விளக்குவதற்கு உவமை ஒன்றைப் பயன்படுத்தலாமா என்று அவரிடம் கேளுங்கள். சிக்கலான கருத்தாக்கங்களை, மிகக் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு அவர் விளக்குவது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சில நேரம் விளக்கத்தைச் சுருக்கமாக முடிக்கலாம்; ஆனால், பெரிய விஷயங்களைச் சொல்லும்போது, கட்டுரை முழுக்க விளக்கத்தை விரித்துக்கொண்டு செல்லலாம். கட்டுரை என்பது விஷயத்தை விளக்க வேண்டும்; மாறாக விளக்கமே கட்டுரையாக மாறிவிடக்கூடாது.

(The Craft of Science Writing நூலில் இடம்பெற்றுள்ள Carl Zimmer எழுதிய Explaining Complexity என்ற கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)

The Craft of Science Writing தொகுப்பாசிரியர்:  சிரி கார்பென்டர் வெளியீடு: The Open Notebook

அறிவியல் இதழியல்Journal of Scienceதிறந்த புத்தகம்அறிவியல் எழுத்துநோட்டுப்புத்தகம்நோட்புக்கின் பணிகள்சிக்கலான அறிவியல்கார்ல் ஸிம்மர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x