

ஹாலாஸ்யன்
தொடர்வண்டி இன்றைக்கு அதிநவீனமாக மாறிவருகிறது. ஆனால், அது கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் மொத்த வண்டியையும் ஒரே நேரத்தில் நிறுத்தக்கூடிய பிரேக் அமைப்பை அது கொண்டிருக்கவில்லை; வண்டியின் ஊழியர்கள் தாம் ஒவ்வொரு பெட்டியாகத் தாவிச் சென்று பிரேக் அமைப்புகளை இயக்குவார்கள். இரண்டு ரயில்கள் சரியான நேரத்திலும் இடைவெளியிலும் நிறுத்த இயலாமல் மோதிக்கொண்ட கோர சம்பவம், தொடர்வண்டிகளுக்கான பிரேக் ஒன்றை வடிவமைப்பதற்கு உந்துதலாக இருந்தது.
டெஸ்லா, எடிசன் போன்ற பெயர்களைத் தெரியாதவர்கள் வெகு சிலரே. ஆனால், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் (George Westing house) என்பவரை அறிந்தவர்களோ வெகு சிலர் மட்டுமே! யார் இந்த வெஸ்டிங்ஹவுஸ்?
கொண்டாடப்படாத மேதை
நியூயார்க் நகரில் 1846-ல் பிறந்த வெஸ்டிங்ஹவுஸ், அதிகம் கொண்டாடப்படாத மாமேதை, தொழில் முனைவோர். இயந்திரங்களின் மீதான காதல் அவரை ஒரு கண்டுபிடிப்பாளராக மாற்றியது. தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் சுழலும் நீராவி எஞ்சின் ஒன்றை வடிவமைத்துக் காப்புரிமை பெற்றதில் இருந்து, அவருடைய காப்புரிமைப் பயணம் தொடங்கியது.
அதன் பின்னர் உழவு டிராக்டர், தடம்புரண்ட தொடர்வண்டிப் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். தொடர்வண்டிகள் மீதான இவருடைய காதல், அதன் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
அழுத்தப்பட்ட காற்றால் செயல்படுகிற அமைப்பு மூலம் தொடர்வண்டிச் சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு நிறுத்தப்படும் அமைப்பை வெஸ்டிங்ஹவுஸ் வடிவமைத்தார். அழுத்தப்பட்ட காற்றைச் சேமிக்கிற ஒரு கலன், பெட்டிகளுக்கு அழுத்தப்பட்ட காற்றை எடுத்துச் செல்லும் குழாய் அமைப்புகள், கலனில் இருந்து காற்றைச் சக்கரங்களுக்கு அருகில் இருக்கும் பிரேக் அமைப்புகளுக்குத் திருப்பும் வால்வு (Valve)அமைப்புகளுடன் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. காற்று எடுத்துச்செல்லும் குழாய் அமைப்பில் பழுது ஏற்பட்டால், தொடர்வண்டிச் சக்கரங்களில் பிரேக் செயல்பட்டு தானாக நிற்கும்; இதனால் பிரேக் பிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டு, தொடர்வண்டி கட்டுப்பாடு இழப்பது தவிர்க்கப்படுகிறது.
வெஸ்டிங்ஹவுஸின் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்வண்டிப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றியது. தொடர்வண்டிகளில் இந்த பிரேக் அமைப்பு கண்டிப்பாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தடத்திலும் ரயில்களின் போக்குவரத்தை அதிகாரி களுக்கும் தொடர்வண்டி ஓட்டுநர்களுக்கும் அறிவிக்கும் அமைப்பு ஒன்றையும் வடிவமைத்தார். தொடர்வண்டித் துறையோடு நின்றுவிடாமல், குழாய்கள் பதித்து மக்களுக்கு எரிவாயு விநியோகித்தல், தொலைபேசி அழைப்புகளைச் சரியான தடத்தில் இணைத்தல் ஆகியவற்றிலும் அவர் முத்திரை பதித்தார்.
எடிசனின் போட்டி
நெடுந்தூரம் கடந்துவரும் மாறுதிசை மின் (Alternating Current) மின்விநியோகம் அன்றைக்கு இல்லை. மாறாகப் பயன்படுத்தப்படும் இடத்துக்கு அருகிலேயே மின்சாரத்தை உற்பத்திசெய்து விநியோகித்த நேர்திசை மின் அமைப்புகள் குறைந்த அளவில் இருந்தன. ஆனால், ஐரோப்பாவின் சில இடங்களில் மாறுதிசை மின்விநியோகம் வெற்றிகரமாக நடப்பதை அறிந்த வெஸ்டிங்ஹவுஸ், மாறுதிசை மின்மோட்டாருக்கான உரிமத்தை டெஸ்லாவிடம் இருந்து பெற்றார்; அதன் முக்கியக் கருவியான மின்மாற்றியின் (Transformers) வடிவத்தை மேம்படுத்தினார்.
குறைந்த மின் இழப்பில் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வகையில், அதிகத் திறன் கொண்ட மாறுதிசை மின்விநியோகத்தை வெஸ்டிங்ஹவுஸ் வடிவமைத்தார். தொழில் போட்டியின் காரணமாக மாறுதிசை மின்சாரம் ஆபத்தானது என்ற எடிசனின் பொய் பரப்புரைகளையும் தாண்டி, வெஸ்டிங்ஹவுஸின் மின்விநியோக முறை வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகப் புகழ்பெற்ற சிகாகோ உலகக் கண்காட்சியில் மின்சாரம், விளக்குகள் ஆகியவற்றை வழங்கும் வாய்ப்பையும் வெஸ்டிங்ஹவுஸ் பெற்றார்.
விளைவாக அவருடைய மின்விநியோக முறை உலகப் புகழ்பெற்றது. இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், நீடித்திருக்கும் கண்டுபிடிப்புகளையும் வெஸ்டிங்ஹவுஸ் விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய பெயரில் 100 காப்புரிமைகள் இருந்தன. அதிகம் வெளிச்சத்துக்கு வராத, ஆனால் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான ஆளுமையாக வெஸ்டிங்ஹவுஸ் இருந்திருக்கிறார்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
yes.eye.we.yea@gmail.com