அறிவியல் அலமாரி: செயலி புதிது
Pocket: Save.Read.Grow
நாம் இணையத்தை மேயும்போது, படிக்க நினைத்து நேரமில்லாமல் கடந்து செல்லும் கட்டுரைச் சுட்டிகளும் வீடியோக்களும் ஏராளம். ஓய்வு நேரத்தில் இவற்றைப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியாகச் சுட்டிகளைச் சேமித்துக்கொள்ள பாக்கெட் செயலி உதவுகிறது. கணினி, மடிக் கணினி, டேப்ளட், ஸ்மார்ட்போன் என எந்தக் கருவியிலிருந்து வேண்டுமானாலும் இந்தச் செயலிக்குள் சேமித்துக்கொள்ளலாம்.
இதில் சேமிக்கப்பட்டவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் படிக்கலாம். இணைய இதழ்கள், பக்கங்களில் இருக்கும் விளம்பரங்களை இந்தச் செயலி நீக்கிடும் என்பதால் படிக்கும்போது தொந்தரவு இருக்காது. அதேபோல் இதன் பக்க வடிவமைப்பை நாம் விரும்பும்படி தகவமைத்துக்கொள்ள்ளுதல், கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்டல் உள்ளிட்ட வசதிகளும் இச்செயலியில் உண்டு.
- நந்து
நுட்பத் தீர்வு: வாட்ஸ்அப் தகவல்களை பேக் அப் செய்யலாம்
வாட்ஸ்அப் உரையாடல்களில் சில நமக்குத் தேவையான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். அவற்றைப் பாதுகாப்பாக நீங்கள் பேக் அப் எடுத்துவைத்துக்கொள்ளலாம். அதற்கு வாட்ஸ்அப்பில் வசதியுள்ளது. எந்த உரையாடலை நீங்கள் பேக் அப் எடுத்துவைக்க நினைக்கிறீர்களோ அந்த உரையாடலுக்குச் சென்று வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் பகுதியில் தொட்டால் தோன்றும் பக்கத்தில் more என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
வரும் பக்கத்தில் Export Chat என்பதைத் தேர்ந்தெடுங்கள். படம், வீடியோ போன்றவையும் வேண்டுமா எழுத்துபூர்வமான தகவல்கள் மட்டும் போதுமா எனக் கேட்கும். உங்கள் விருப்பத்துக்கு அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அந்த பேக் அப் கோப்பை மின்னஞ்சல், கணினி போன்ற எதற்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளலாம்.
- ரிஷி
காட்சிவழி கற்கலாம்: புத்திசாலியாக இருப்பதில் தவறில்லை
‘‘இட்’ஸ் ஓகே டு பி ஸ்மார்ட்’ (It’s Okay to be Smart) யூடியூப் அலைவரிசை 2012-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அறிவியலில் எப்போதும் தீராத ஆர்வம் கொண்டிருப்பவர்கள் இது ஒரு சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுகிறது. ‘வேற்றுகிரகவாசிகளின் நாகரிகத்தை ஏன் நம்மால் கண்டுபிடிக்கவில்லை?’, ‘மரங்கள் பேசுமா?’, ‘விண்வெளியில் எப்படி காபி குடிப்பது?’, ‘பூமியின் நீளமான ஆறு-வானம்’, ‘பழக்கங்கள் எப்படி மூளையை மாற்றுகின்றன?’, ‘உங்கள் நினைவுத்திறன் எப்படிச் செயல்படுகிறது?’ என்பன போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு இந்தச் அலைவரிசையின் காணொலிகள் பதிலளிக்கின்றன.
