

வினோத் ஆறுமுகம்
சமூக வலைத்தளம் எனும் மெய்நிகர் உலகில் மக்கள் கட்டுண்டு கிடக்கும் யுகம் இது. தொழில்நுட்ப வளர்ச்சியின் மிக மோசமான பக்கமும், சமூக வலைத்தள நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இழுக்கப்பட்டு வருவதன் வலுவான அறிகுறிகளும் வெளிப்பட்ட ஆண்டு இது. இங்கிலாந்தைச் சேர்ந்த மாலி ரஸ்ஸலின் என்ற 14 வயதுச் சிறுமி 2017-ல் தற்கொலை செய்துகொண்டார்.
இதை விசாரித்துவந்த காவல்துறை, சமூக வலைத்தளங்களின் கறுப்புப் பக்கத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. பல சமூக வலைத்தளங்களில் மாலி இயங்கியுள்ளார். விசாரணைக்காக அவருடைய சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறந்து பார்த்த காவல்துறை, மாலி மன அழுத்தம் தரக்கூடிய, தற்கொலைக்குத் தூண்டக்கூடிய பல தகவல்களை சமூக வலைத்தளங்கள் வழியாக நாள்தோறும் பெற்றிருக்கிறார் என்று அறிந்தது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சிறார்களைப் பற்றியும், மிக மோசமான தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் எவ்வளவு எளிதாகக் கொண்டு சேர்க்கின்றன என்பதும் மிகப் பெரிய விவாதமானது.
போலிச் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘போலிச் செய்தி’களைப் பற்றி ஆய்வுசெய்து பிரிட்டிஷ் நாடாளுமன்றச் சிறப்புக் குழு அறிக்கை தாக்கல்செய்தது. சமூக வலைத்தளங்களை ‘டிஜிட்டல் கேங்கஸ்டர்’ என்று அந்த அறிக்கை மிகச் சுருக்கமாகவும் காட்டமாகவும் விமர்சித்தது. உலகில் உலவும் 90 சதவீதப் போலிச் செய்திகளை உருவாக்குவதே இந்தச் சமூக வலைத் தளங்கள்தாம் என்றும் லாபத்துக்கான அதைத் தடுக்க எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதிர்ச்சி ஆராய்ச்சி
ஸ்மார்ட்போன், இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைச் சிறார், பதின் வயதினர் பயன்படுத்துவதைப் பற்றிப் பல புதிய ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. குறிப்பாகப் படுக்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பதின் வயதினர் தங்கள் ஆயுளைக் குறைத்துக்கொள்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உகாண்டாவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மக்களுக்கு அரசு அதிரடியாக வரி விதித்தது. இதனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைப் பலர் நிறுத்தினார்கள்.
நேரலையான படுகொலை
‘மோமோ சேலஞ்ச்’ என்று ஒரு சேலஞ்ச் சிறுவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக ‘புளூவேல்’ என்ற தகவல் பரவி பெற்றோர்களைக் கவலைகொள்ள வைத்தது. ஆனால், அது வதந்தி என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. நியூசிலாந்தில் மசூதிக்குள் புகுந்த ஒரு பயங்கரவாதி, காண்போரைத் துப்பாக்கியால் சுடும் காட்சியை ஃபேஸ்புக் நேரலையில் பதிவிட்டார்.
அந்தக் கொலைச் செயலின் அதிர்ச்சி அடங்கினாலும், ஃபேஸ்புக் நிறுவனம் அந்தக் காணொலிகளை நீக்குவதில் காட்டிய மெத்தனம் அனைவரின் கண்டனங்களையும் ஒருங்கே பெற்றது. அந்தக் கோர வீடியோ வைரலாகி, ஃபேஸ்புக்கில் இருந்து அதை மொத்தமாக நீக்குவதற்குப் பல வாரங்கள் பிடித்தன.
பாதகத் தொழில்நுட்பம்
பல கோடிப் பயனர்களைக் கொண்டு ‘டிக்டாக்’ பிரபலமானது இந்த ஆண்டுதான். செல்ஃபி எடுக்கிறேன், டிக்டாக் செய்கிறேன் என அகால மரணங்கள் அதிகமானதும் இந்த ஆண்டுதான். பதின் வயதினர் மிகவும் அசட்டையாக மரணிக்கும் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் மனதைப் பிசைந்தன. சீனாவைச் சேர்ந்த ‘ஜோ’ எனும் செயலி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உங்கள் முகத்தைப் பிசிறில்லாமல், எந்த சினிமா காட்சியிலும் பொருத்திவிடும் ‘டீப்பேக்’ எனும் தொழில்நுட்பம், ஆய்வுக்கூடங்களில் இருந்து நடைமுறைக்கு வந்து சக்கைப் போடு போட்ட ஆண்டும் இதுதான். இதைப் பார்த்து வருங்காலத்தில் ஜனநாயகத்துக்கே ஆபத்து என்று வல்லுநர்கள் எச்சரிக்க, மக்கள் கண்டுகொள்ளாமல், தங்கள் முகத்தை ‘டைட்டானிக்’ கதாநாயகன் முகத்துடன் பொருத்தி, கேட் வின்ஸ்லெட்டுடன் காதல் செய்தார்கள்.
நம்பிக்கையும் உண்டு
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் போலி அழகை விமர்சித்து, இயல்பான உடலே அழகு என்று #AllIsFineWithMe எனும் ஹேஷ்டாக் மூலம் இன்ஸ்டாகிராமில், ஒரு போராட்டத்தையே பெண்கள் முன்னெடுத்தார்கள். இன்ஸ்டாகிராம் முகம் வேண்டும் என பிளாஸ்டிக் சர்ஜரி ஒரு பக்கம் நடைபெற்றது. அந்தப் போலி அழகை விமர்சித்து பெண்ணின் இயல்பான அழகைக் கொண்டாடிய ஆண்டும் இதுதான்!
| #எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் |
கிரெட்டா துன்பெர்க் எனும் 16 வயதுச் சிறுமி பள்ளிக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு அமர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தொடங்கினார். அவருடைய போராட்டம் மெல்ல ஐரோப்பியா முழுவதும் பரவியது; 2019-ன் தொடக்கத்தில் பல பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினார்கள். சமூக வலைத்தளங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டங்கள், ஹேஷ்டேக்குகள், குழுக்கள் விரிவடைந்தன. டிவிட்டர் ஹேஷ்டேக் உதவியுடன் தன்னார்வலர்கள் கூடி கடற்கரையை, பொது இடங்களைச் சுத்தம் செய்தனர். ஞெகிழி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுசூழல் விழிப்புணர்வுப் போராட்டங்கள் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இந்த ஆண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. |
கட்டுரையாளர் தொடர்புக்கு:
write2vinod11@gmail.com