

காட்டுயிர்களின் விந்தையான நடத்தைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ‘அனிமல் வொண்டர்ஸ் மொன்டானா’ (AnimalWonders Montana) யூட்யூப் அலைவரிசை உதவுகிறது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் ஆதரவு தேவைப்படும் காட்டுயிர்களைப் பேணிவருகிறது ‘அனிமல்வொண்டர்ஸ் இன்க்’ என்ற தன்னார்வ அமைப்பு.
இதன் நிறுவனர் ஜெஸ்ஸி நுட்ஸன் இந்த அலைவரிசையை 2011-லிருந்து நிர்வகித்துவருகிறார். வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கான உணவு ஆலோசனைகள், கிளியைப் பேசப் பழக்குவது போன்றவற்றை இந்த அலைவரிசை விளக்குகிறது.
- கனி
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/AniWonders
நுட்பத் தீர்வு: நினைவூட்டும் கூகுள்
கணினியில் ஒரு வேலைசெய்துகொண்டிருக்கிறீர்கள். இடையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மற்றொரு வேலை இருக்கிறது. அதை நினைவூட்ட வேண்டும், கையில் மொபைல் இல்லை என்றால் கவலையே படாதீர்கள், உங்களுக்குக் கைகொடுக்க கூகுள் இருக்கிறது.
எவ்வளவு நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமோ அந்த நேரத்தைக் குறிப்பிட்டு கூகுளில் டைமர் செட் பண்ணிக்கொண்டீர்கள் என்றால் போதும். உதாரணமாக, அரை மணி நேரத்தில் நினைவுபடுத்த Set timer 30 minutes என்று கூகுளில் டைப் செய்து ஓடவிடுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் சத்தம் எழுப்பி கூகுள் உங்களுக்கு நினைவுபடுத்தும்.
- ரிஷி
செயலி புதிது - இணைப்புச் செயலி AirDroid: Remote Access & File
உங்கள் ஸ்மார்ட்போனை, உங்களுடைய மேசைக் கணினி, மடிக்கணினி, டேப்லெட் ஆகியவற்றுடன் டேட்டா கேபிள் இல்லாமலேயே இணைக்க உதவுகிறது ‘ஏர்டிராய்ட்’ செயலி. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் தரவிறக்கிக் கொள்வதன் மூலம், அதில் உள்ள கோப்புகள், ஒளிப்படங்கள், காணொலிகள் அனைத்தையும் மேசைக் கணினியில் சேமித்துவைக்கலாம்.
கூடுதலாக உங்கள் செல்பேசிக்கு வரும் அழைப்புகளுக்குக் கணினி மூலமாகவே பதில் சொல்லலாம்; குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றுக்குக் கணினியில் அறிவிப்பு பெறலாம்; தவறவிட்ட அழைப்புகளைத் தெரிந்துகொள்ளலாம். விண்டோஸ், ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், மாக், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களிலும் ஏர்ட்ராய்ட் செயல்படும்.
- நந்து