Published : 03 Dec 2019 12:11 PM
Last Updated : 03 Dec 2019 12:11 PM
எளிமையான வழிகளில் கணித உத்திகளை விளக்கும் ‘டெக்மேத்’ யூட்யூப் அலைவரிசை 2009-ல் தொடங்கப்பட்டது. திரிகோணமிதி, அல்ஜீப்ரா, நிகழ்தகவு, வர்க்கமூலம், வடிவகணிதம், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை எளிமையாக்கும் பல்வேறு உத்திகள் இருநூறுக்கும் மேற்பட்ட காணொலிகளில் விளக்கப்பட்டுள்ளன. வேகமாக மனக் கணக்கிடுவதற்கான சுவாரசியமான பல உத்திகளை இந்தக் காணொலிகள் வழங்குகின்றன. கணிதத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு
இந்த ‘டெக்மேத்’ ஒரு சிறந்த வழிகாட்டி.
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/TECMATH
- கனி
செயலி புதிது: UrbanClap – Beauty and Home Services
கதவுகளின் தாழ்ப்பாள் உடைந்துபோதல், குழாயில் சரியாகத் தண்ணீர் வராதது உள்ளிட்ட நாம் அன்றாடம் சந்திக்கும் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கிறது ‘அர்பன்கிளாப்’ செயலி. தச்சர், பிளம்பர், முடிதிருத்துநர், அழகு சாதனக் கலைஞர்கள், இயந்திரப் பழுதுநீக்குபவர்கள், வீடு, இயந்திரங்கள் ஆகிவற்றைச் சுத்தம் செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்ட தொழில் நிபுணர்களின் சேவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதைத் தரவிறக்கிப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்குத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்கான செலவு எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
பயனரின் இடத்தை கூகுள் மேப் மூலம் அறிந்து, சேவையை வழங்குவதற்கான நிபுணர் அனுப்பப்படுவார். குறிப்பிட்ட சில சேவைகள் கிடைக்க தாமதமாவது; நிபுணர்கள் மோசமான சேவையைத் தந்துவிட்டுச் செல்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்த புகார்கள் இந்தச் செயலிமீது இருக்கின்றன. என்றாலும், 100 சதவீதம் பிரச்சினைகளே இருக்காது என்ற உத்தரவாதத்துடன் எந்த ஒரு தனியார் சேவையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
- நந்து
நுட்பத் தீர்வு: மிராகாஸ்ட் (Miracast)
தற்போது செல்பேசிகளின் திரை பெரிதாகவிட்டது. இருப்பினும், பெரிய திரைகள் தரும் அனுபவமே அலாதியானது. ஆடியோ தரமும் அதில் அபாரமானது. மொபைலில் பார்ப்பதைத் தொலைக்காட்சிக்கு மாற்ற நிறைய தொழில்நுட்பம் உண்டு. ‘மிராகாஸ்ட்’ அதில் ஒன்று. வைஃபை டைரக்ட் டெக்னாலஜி மூலம் மிராகாஸ்ட் செயல்படுகிறது. இதில் வைஃபை எனப்படுவது செல்பேசிக்கும், தொலைகாட்சிக்கும் மட்டுமேயான (லோக்கல்) நெட்வொர்க்.
எனவே, இதற்கு இணைய இணைப்பு தேவையில்லை. உங்கள் செல்பேசியும், தொலைக்காட்சியும் மிராகாஸ்ட்டை சப்போர்ட் செய்ய வேண்டும். செல்பேசி அமைப்புகளில் (settings) ‘ஸ்க்ரீன் மிரரிங்’ என்ற வசதியைத் தெரிவு செய்துவிட்டால், நமது செல்பேசியில் தெரிவது பெரிய திரையில் தெரிய ஆரம்பித்துவிடும்.
- நிஷா