வலை 3.0: இணையத்தில் சமூக அலை!

வலை 3.0: இணையத்தில் சமூக அலை!
Updated on
2 min read

புத்தாயிரத்துக்குப் பின், இணையத்தில் இரண்டு புதிய போக்குகள் எழுச்சிபெற்றன: சமூக வலைத்தளங்கள்; பங்கேற்கும் தன்மை கொண்ட தளங்கள். இந்த இரண்டும் ‘இரண்டாம் வலை’ என்று பிரபலமாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்தப் போக்கை உணர்த்தும் தளங்கள் அதற்குச் சில ஆண்டுகள் முன்பே உருவாகி இருந்தாலும், ‘வெப் 2.0’ என்ற பதம் 2005-ல்தான் புழக்கத்துக்கு வந்தது.

ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் இன்றைக்குப் பிரபல சமூக வலைதளங்களாக விளங்குகின்றன. ஆனால், முதல் சமூக வலைதளமான ‘சிக்ஸ்டிகிரீஸ்’ (SixDegrees) 1997-லேயே அறிமுகமாகிவிட்டது. உலகில் உள்ள எவரும், ஆறு இணைப்புகள் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள் எனும் சமூகவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தத் தளம் இயங்கியது.

சிக்ஸ்டிகிரீஸ்-ஐத் தொடர்ந்து ‘பிரண்ட்ஸ்டர்’ (Friendster) எனும் சமூக வலைதளம் 2003-ல் அறிமுகமானது. இந்தத் தளம் உறுப்பினர்கள், நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும், உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவும் வழிசெய்தது. இணையவாசிகளிடையே பிரபலமான முதல் சமூக வலைப்பின்னல் சேவையாக இதைக் கருதலாம்.

பள்ளிக்கால நண்பர்களை இணையம் மூலம் தொடர்புகொள்ள உதவும் ‘கிளாஸ்மேட்ஸ்’ (Classmates); சமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களான, உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுகச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளுதல், சக உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளுதல் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட ‘மைஸ்பேஸ்’ (MySpace); தொழில்முறை நோக்கிலான சமூக வலைப்பின்னல் சேவையாக அறிமுகமான ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) போன்ற தளங்கள் இந்தக் காலகட்டத்தில் அறிமுகமாகின.

வந்தது ஃபேஸ்புக்

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையாக 2004-ல் ஃபேஸ்புக் அறிமுகமானது. அங்கே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இதர கல்லூரிகளுக்கும் இந்த சேவை விரிந்தது. மாணவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், 2006-ல் பொதுமக்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு நடந்தது இணைய வரலாறு!

ஃபேஸ்புக் புதிய அலையாக வீசிக்கொண்டிருந்த நிலையில், இணையத்தில் வீடியோவைப் பகிர்வதை எளிதாக்கிய ‘யூடியூப்’ அறிமுகமாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2006-ல் அறிமுகமான டிவிட்டர், 140 எழுத்துக்களில் கருத்துகளைப் பகிரும் குறும்பதிவு வசதியை இணையவாசிகளிடையே பிரபலப்படுத்தியது.

இதனிடையே, பிளிக்கர் (Flickr) இணையதளம், ஒளிப்படங்கள் சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றது. ஒளிப்படங்களின் உள்ளட்டக்கத்தை எளிதாக அடையாளம் காண வழிசெய்யும் குறிச்சொற்கள் சார்ந்த டேகிங் (tagging) உள்ளிட்ட அம்சங்களை பிளிக்கர் பிரபலப்படுத்தியது.

இடைவெளி குறைப்பு புத்தாயிரத்துக்குப்பின் அறிமுகமான இணையதளங்களில், ‘மீட் அப்’ (Meetup) தளம் தனி இடத்தைப் பெறுகிறது. இணையம் மூலம் சந்திப்புகளைத் திட்டமிட்டு, நேரில் சந்தித்துக்கொள்ள வழிசெய்யும் இந்தத் தளம், இணைய உலகையும் நிஜ உலகையும் இணைக்கும் பாலமாக அமைந்தது. சகமனிதர்களிடம் இணையம் இடைவெளியை அதிகரித்துவருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், இணையம் மூலம் நிஜ வாழ்க்கைச் சந்திப்புகளை ஏற்படுத்தும் புதுமைக் கருத்தாக்கத்துடன் அறிமுகமாகி ‘மீட் அப்’ பெரும் வெற்றிபெற்றது.

இதே காலகட்டத்தில் அறிமுகமான சேஞ்ச் (Change.org) இணையதளம், சமூக நோக்கிலான தொடர்புகளுக்கு வழிவகுத்ததுடன், மாற்றத்துக்கான ஆயுதமாகவும் விளங்கும் என உணர்த்தியது. இணைய மனுக்கள் மூலம் சக மனிதர்களின் ஆதரவைத் திரட்டி சமூக விழிப்புணர்வுக்கு வழிசெய்யும் வகையில் இந்தத் தளம் அமைந்திருக்கிறது.

(அடுத்த இதழில் நிறைவடையும்)
- சைபர் சிம்மன் தொடர்புக்கு: narasimhan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in