

ஹாலாஸ்யன்
இணையம், இணையவழித் தகவல் தொடர்பு என்றவுடன் செயற்கைக்கோள்களே நம் நினைவுக்கு வரும். கூகுளில் நாம் தேடும் ஒரு தகவல் அப்படியே வான்வழியாகப் போய் ஒரு செயற்கைக்கோளில் மோதி, பின்னர் அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு கணினியுடன் பேசி நமக்குத் தகவல் வருவதாக நம்மில் பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருப்போம்.
கடலுக்கடியில் தகவல்
உண்மையில் 90 சதவீதத்துக்கும் மேலான இணையப் போக்குவரத்து கடலடித் தகவல்தொடர்புக் கம்பிகள் (Submarine communication cables) வழியாகவே நிகழ்கிறது. இதில் பல நன்மைகள் இருக்கின்றன. கண்ணாடி இழைக் கம்பிகள் (Fibre-Optic Cables) மூலம் தகவல் கடத்தப்படுகையில் ஒளியின் வேகத்தில் நம்மால் தகவல்களை அனுப்ப முடியும். மேலும், ஒரே கம்பியில் வேறு வேறு துடிப்பெண் (pulsation), வேறு வேறு அளவீடுகளில் தகவல்களை அனுப்ப முடியும்.
இதுவே செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் அதிக நேரம் பிடிக்கும் செயல்பாடாக மாறிவிடும். மேலும், அதற்கான கற்றை ஒதுக்கீடுகளில் இவ்வளவுதான் அனுப்ப முடியும் என்ற வரைமுறையும் இருக்கும். கடலடித் தகவல்தொடர்புக் கம்பிகளை நிறுவ செலவும் நேரமும் ஆகும் என்றாலும், அது தரக்கூடிய பயன்களைச் சீர்தூக்கிப் பார்க்கையில் அவை மிக மலிவானவை.
வரலாற்றுரீதியாகப் பார்த்தால், அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்க, முதன்முதலில் தந்திக் கம்பிகளை அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் பதித்தார்கள்; தந்திக் கம்பிகளில் உலோகத்தில் தகவல்கள் கடத்தப்படும். அந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து இன்று கண்ணாடி இழைக் கம்பிகளில் வந்து நிற்கிறது. இந்தக் கண்ணாடி இழைக் கம்பியைச் சுற்றிப் பாதுகாப்பு அமைப்புக்காக வேறுவேறு பொருட்களாலான ஏழு அல்லது எட்டு அடுக்குகள் இருக்கும்.
ஏழடுக்குப் பாதுகாப்பு
கண்ணாடி இழைகள் ஒன்றோடொன்று உராய்ந்து பாதிக்கப்படாமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி; அதற்கு மேல் தாமிரம் அல்லது அலுமினியம்; அதற்குமேல் பாலிகார்பனேட் என்று வலுவான பிளாஸ்டிக் அமைப்பு; அதற்கு மேல் நீர் புகாமல் இருக்க அலுமினிய அமைப்பு; பிற காந்தப்புலங்களால் பாதிப்படையாமல் இருக்க மெல்லிய எஃகு இழைகள்; அதற்குமேல் மைலார் எனப்படும் உலோக பிளாஸ்டிக் கூட்டமைப்பால் ஆன அடுக்கு; அதற்கும் மேல் பாலித்தீனால் ஆன மேலடுக்கு. இது மொத்தமும் சேர்ந்து 3-4 அங்குல விட்டம் கொண்ட அமைப்பாக வரும்.
ஆனால், அதன் வேகம் ஒரு நொடிக்கு டெராபைட் அளவீடுகளில் இருக்கும். இந்தக் கடலடிக் கம்பிகளை, சோனார் (SONAR) என்ற ஒலி அளவீட்டைக் கொண்டு கடற்படுகையைத் தெளிவாக ஆராய்ந்த பின்பே நிறுவுவார்கள். இந்தக் கம்பிகளை நிறுவவும், பழுதுநீக்கவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் உண்டு. நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் இடையில் இது நிறுவப்படுகிறது.
ஏதேனும் காரணத்தால் அந்தக் கம்பிகள் துண்டிக்கப்பட்டால், பிற நாடுகளுடனான இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். அந்தக் கம்பிகளே உலகத் தகவல் ஓட்டத்தில் முக்கிய ரத்த நாளங்கள். அடுத்த முறை இணையத்தில் எதையாவது தேடுகையில் நாம் தேடும் தகவல், கடலில் மூழ்கி எழுந்து வெளியே வந்திருக்கிறது என்று நினைவில் வைத்துக்கொள்வோம்!
கட்டுரையாளர் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com