

சைபர் சிம்மன்
புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களான அந்த இரண்டு இளைஞர்கள், இணையத் தேடலை மேம்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு தொழில்முனைவோராக வேண்டுமென்ற கனவோ சொந்த நிறுவனம் தொடங்க வேண்டுமென்ற லட்சியமோ இருக்கவில்லை.
தங்கள் ஆய்வை வணிகமயமாக்க ஒரு தேடுபொறியை உருவாக்கினார்கள்; அந்தத் தேடுபொறி ஒரு நிறுவனமானது; அந்த நிறுவனம் மாபெரும் வளர்ச்சி பெற்று இணைய சாம்ராஜ்யமானது. அந்த இளைஞர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின்; ‘கூகுள்’ என்று பெயரிடப்பட்ட தேடுபொறி, இணையத் தேடலின் மறுபெயரானது!
எப்படிச் சாத்தியமானது?
பிரவுசர், மின்னஞ்சல், மொபைல் இயங்குதளம், கிளவுட் சேவை, செயற்கை நுண்ணறிவு ஆய்வு, ஸ்மார்ட்போன், வரைபடம் எனப் பல்வேறு சேவைகளை கூகுள் இன்றைக்கு வழங்கினாலும், ‘ஒரு தூய தேடுபொறி’ என்ற எளிய நோக்கத்துடனேயே 1998-ல் கூகுள் தொடங்கப்பட்டது. தனித் தேடுபொறிகளுக்குச் செல்வாக்கு இல்லை என்ற சூழலில், தேடலை மட்டுமே வழங்கும் தூய தேடுபொறியாக கூகுள் அறிமுகமானது. அதன் நிறுவனர்களான லாரி பேஜுக்கும் செர்ஜி பிரின்னுக்கும் அந்த நம்பிக்கை வருவதற்குக் காரணம் கூகுளின் பின்னே இருந்த ஆய்வு.
எத்தனையோ தேடுபொறிகள் இருந்தாலும், இணையத் தேடலில் ஒருவித அலுப்பும் அதிருப்தியும் பயனாளிகளுக்கு இருந்தது. இணையம் வளர்ந்துகொண்டிருந்த நிலையில், எதிர்பார்த்த தகவலைத் தேடுவது சிக்கலாக இருந்தது. ஒரே நேரத்தில் பல தேடுபொறிகளில் தேடிப் பார்க்க வழிசெய்யும் ‘மெட்டா தேடியந்திரங்க’ளும் இணையத்தில் எல்லா வகைத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கிய யாஹூ போன்ற வலைவாசல் (போர்ட்ல்) தளங்களும் பிரபலமாக இருந்தன.
கூகுளின் முதுகெலும்பு
இணையதளங்கள் இணைக்கப்பட்டிருந்த விதம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த பேஜ், ஒவ்வோர் இணையதளமும் வேறு பல இணையதளங்களால் அடையாளம் காட்டப்படுவதைக் கவனித்தார். ஒரு இணையதளம் எத்தனை தளங்களால் சுட்டிக்காட்டுப்படுகிறது, அந்தத் தளங்களின் நம்பகத்தன்மை போன்ற அம்சங்கள் குறிப்பிட்ட இணையதளத்தின் தரத்துக்குச் சான்று என அவர் நினைத்தார். அதன் அடிப்படையில் இணையதளங்களைப் பட்டியலிட்டால், மேம்பட்ட தேடலுக்கு வழிவகுக்கும் என்று பேஜ் நம்பினார்.
அவரும் செர்ஜி பிரின்னும் வலைப் பக்கங்களைச் சேமிக்கத் தொடங்கினார்கள். இந்த சேமிப்பிலிருந்து தரத்தின் அடிப்படையில் கச்சிதமான தேடல் முடிவுகளை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தேடல் நுட்பத்தின் ‘பேக்ரப்’. இதுவே கூகுள் தேடலின் முதுகெலும்பாக அமைந்த ‘பேஜ் ரேங்க்’ நுட்பமாகப் பரிணமித்தது; ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த எண்ணமே, வணிகமாக வடிவமாக்கப்பட்டு எல்லாம் வல்ல கூகுள் தேடுபொறியானது!
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர்
தொடர்புக்கு: enarasimhan@gmail.com