

தமிழ் கலாச்சாரத்தை பேணிக்காப்பதற்காகவும், உலகில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டவும் டல்லாஸில் அண்மையில் அகத்தியர் கலை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் பி.ஆர்.கண்ணன் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை விளக்கினர்.
சமீபத்தில் ஆடிமாதத்தை முன்னிட்டு இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஆடிப்பூர அம்மன் அருள்பாலித்தார். தெய்வீகப் பாடல்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆடிமாதத்தின் முக்கியத்துவம், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், ஆடித் தபசு போன்றவை குறித்து அமைப்பின் நிர்வாகி உமா சிதம்பரம் எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்வுகளின் நன்மைகள், நமது முன்னோர் கடைபிடித்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன. அமைப்பின் மற்றொரு நிர்வாகி பாலாஜி அரியனன், அமைப்பின் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, அமைப்பின் இலக்கு, அன்றாட நிகழ்வுகள் குறித்து உரையாற்றினார்.
முளைப்பாரி பேரணியில் பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை சுமந்து கொண்டு கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு முன்னர் மாவிளக்கேற்றி வழிபட்டனர். அனைவரும் பங்கேற்ற கும்மி நடனத்துக்குப் பிறகு பயில் சிலம்பம், பறைக் குழுவின் பாரம்பரிய திறன் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சிக் குழு சார்பில் தமிழ் பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் தொடர்பான செய்திகள் விளக்கப் பதாகைகள் மற்றும் அட்டை மூலம் விவரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் சிவகாமி அம்மாள் நைவேத்திய பொருட்கள் சமர்ப்பித்து ஆரத்தி காட்டினார். செந்தில் பொன்னுராஜ் கோலம், கைவினைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை அறிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு உபசரிப்பை சீனிவாசன் குழுவினர் மேற்கொண்டனர்.