

காஞ்சி மாவட்டம் திருவெக்கா யதோக்தகாரி பெருமாள் கோயில் 51-வது திவ்ய தேசமாகும். பொய்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான இத்தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது.
பிரம்மதேவன் செய்யும் யாகத்தை தடுக்க சரஸ்வதி தேவி வேகவதியாக மாறியபோது, பிரம்மதேவன் திருமாலை வேண்டினார். திருமாலும் பிரம்மதேவனுக்கு உதவி செய்யும் பொருட்டு, வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க வேகவதி ஆற்றின் குறுக்கே அணை போல் சயனித்தார். இதனால் சரஸ்வதி தேவி தனது செயலுக்கு வெட்கமுற்று தலை குனிந்ததால், இத்தலம் ‘திருவெட்கா’ என்று அழைக்கப்படுகிறது.
பார்க்கவ முனிவரின் மகனாக, திருமழிசை தலத்தில் திருமாலின் சக்கரத்தின் அம்சமாக, திருமழிசை ஆழ்வார் அவதரித்தார். பிரம்பறுக்க வந்த ஒருவர் இவரை எடுத்து வளர்த்தார். பிறந்தது முதல் ஆழ்வார் பால் அருந்தாததை அறிந்த வேளாளர், காய்ச்சிய பசும்பாலை ஆழ்வாருக்கு அளித்தார்.
அன்று முதல் இவர்கள் கொடுக்கும் பாலை அருந்தினார் திருமழிசை ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். திருமழிசை ஆழ்வார் மீதம் வைத்த பாலை வேளாளரும் அவரது மனைவியும் அருந்தினர். உடனே முதுமை போய், இருவரும் இளமை வரப்பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே இருந்து வந்த கனிக்கண்ணன், அவரது சீடனானான்.