

கிறிஸ்துமஸ் பண்டிகை ஜெர்மனியில் தொடங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் பரிசளிப்புகள் தொடர்பான பதிவுகள் கிடைத்தன. பண்டைய ரோமில் டிசம்பர் மாத இறுதியில் சாட்டர்னேலியா என்ற அறுவடைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதுபோல, டிச.25-ல் ரோமானியர்கள் "மக்களாட்சி சூரியனின் பிறப்பு" என்ற சூரிய வழிபாட்டு விழாவைக் கொண்டாடினர். அந்த நேரத்தில் கிறிஸ்தவம் பரவத்தொடங்கியபோது, மக்களின் கவனத்தை ஈர்க்கவும், ஏற்கெனவே பழக்கத்தில் இருந்த அந்த நாட்களிலேயே இயேசுவின் பிறப்பையும் கொண்டாட திருச்சபை முடிவு செய்தது.
ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுதைத் கொண்ட நாள் டிச.21 அல்லது 22 ஆகும். இதன்பிறகு, பகல் பொழுது மெதுவாக நீளத்தொடங்கும். இதை இருள் விலகி ஒளிபிறக்கும் நிகழ்வாக் கருதிய ஆரம்பகால கிறிஸ்துவர்கள், உலகுக்கு ஒளியாக வந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாட இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆரம்பகால கிறிஸ்துவ மரபுகளின்படி, இயேசு சிலுவையில் அறையப்பட்ட மார்ச் 25-ம் தேதியே அவர் அன்னை மரியாவின் கருவில் உருவான தினமாக நம்பப்பட்டது. மார்ச் 25-ல் இருந்து சரியாக 9 மாதங்கள் கழித்து வரும் டிச.25 அவர் பிறந்த தினமாகக் கணக்கிடப்பட்டது
கிபி.336-ம் ஆண்டு ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் முதன்முதலாக டிச.25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டதாக வரலாற்றுப்பதிவு கூறுகின்றன. பின்னர் போப் ஜூலியஸ் இந்தத் தேதியை முறைப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உருவானது தொடர்பாக நீண்ட வரலாறு உண்டு. ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலஸ்.
ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் இறந்த பின்னர் அவரது உடல் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் மக்களிடம் காட்டிய கருணை, அன்பு, அவரது தயாள குணம் ஆகியவற்றால், அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர்.