

கடலூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் பிள்ளைப் பேறு அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்றால் திருமாணிக்குழியை அடையலாம்.
மூலவர்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்.
அம்பாள்: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.
தல வரலாறு: பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகுக்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும் அதிதேவிக்கும் 12-வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.
மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஓர் அடியால் பூமியையும், ஓர் அடியால் ஆகாயத்தையும், அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார்.
அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். மகாபலியின் பக்தியை மெச்சிய திருமால் அவரை சிரஞ்சீவிகளுள் ஒருவராக்கினார்.
இப்படி மகாபலியை தர்மத்துக்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத்துக்கு திருமாணிக்குழி என பெயர் ஏற்பட்டது.