

தல வரலாறு: பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றின. நிறைவாகமகாலட்சுமி வெளிப்பட்டாள்.
முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தரச் சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார்.
பெருமாள், பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு ‘பெரும்புறக்கடல்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்துக்கு ‘லட்சுமி வனம்’ என்ற பெயரும் இங்கேயே திருமணம் நடந்ததால், ‘கிருஷ்ண மங்கள ஷேத்ரம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.