

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் முதல்வனாக சூரிய பகவான் போற்றப்படுகிறார். தமிழ் இலக்கியங்கள், ஞாயிற்றை ஆழ்வான், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், சூதன், ஜோதி, தினகரன், பகலவன், சூரியன், செங்கதிரோன், பரிதி, எரிகதிர், உதயன் என்று பலவாறு அழைக்கின்றன.
சங்க காலத்திலும் சூரிய வழிபாடு இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆணவ இருளில் மூழ்கிக் கடக்கும் உயிர்களுக்கு தன் இன்னருள் ஒளி கொடுத்து, அந்த இருளைப் போக்கி அறிவுக்கு உகந்த செயல்களை செய்யவைக்கும் இறைவனைப் போன்று, புற இருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர் களுக்கு தன்னொளி அளித்து, உலக இயக்கத்தை தொடங்கி வைப்பவராக சூரியதேவன் விளங்குகிறார்.