

வேத விற்பன்னர், சிறந்த உபன்யாசகர் முக்கூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மாச்சாரியார் (1944-2001) ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடித்து, ரிஷி போன்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்.
‘முக்கூர் சுவாமி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவர், வேத யக்ஞ சாஸ்திரம், சமபிரதாயங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவராகப் போற்றப்படுகிறார்.
தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான அதி அற்புதமான உபன்யாசங்களை நிகழ்த்தியதுடன், நாடு முழுவதும் 108 மகா நரசிம்ம யக்ஞங்களை நடத்தினார். ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொண்ட சுவாமி, விளம்பரங்களைத் தவிர்த்து, நரசிம்ம பக்தியை முன்னிறுத்தி நாடு முழுவதும் பயணம் செய்தார்.
யாகங்களையும் உபன்யாசங்களையும் நிகழ்த்துவதன் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்பும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், திவ்யபிரபந்தங்கள், ஸ்ரீபாஷ்யம் என அனைத்திலும் மிக இயல்பாக, ஆழமான புலமையுடன் சொற்பொழி வாற்றினார்.
ஸ்ரீ அகோபில மடத்தின் 44-வது ஜீயர் முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மீது சுவாமி கொண்டிருந்த பக்தி அளவிடமுடியாதது. இன்னும் பல இல்லங்களில் அவரது ஒலிப்பதிவுகள் வழிபாட்டு அறைகளில் ஒலிக்கின்றன. சுவாமியின் உபன்யாசத்தைக் கேட்டு அனுபவித்தவர்கள், குறுந்தகடுகள், பல தொகுதிகளைக் கொண்ட ‘குறை ஒன்றும் இல்லை’ போன்ற படைப்புகள் மூலம் இளம் தலைமுறைக்கு, அவரை அறிமுகப்படுத்துகின்றனர்.
இணையதளங்களில் முக்கூர் சுவாமியின் வாழ்க்கை, சொற்பொழிவுகள், பங்களிப்புகள் தொடர்பாக பல கட்டுரைகள், குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவரைப் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு இதுவரை ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. ஸ்ரீவைஷ்ணவம் தொடர்பான ஆங்கில நூல்கள் பெரும்பாலும் பகவத் ராமானுஜர், யமுனாச்சாரியார் போன்ற ஆதி ஆச்சாரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையே மையமாகக் கொண்டுள்ளன.