

தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் மன்னரை மையமாகக் கொண்டு சமூகம் இயங்கியது. ‘மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்’ என்று கூறப்பட்டது. மன்னர்கள் கோயில்கள் பல எழுப்பினர்.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து எட்டுப் பரிவார கோயில்களை உடைய அழகிய கட்டுமானக் கோயில்களை சோழர்கள் நிறுவினர். பதினான்காம் நூற்றாண்டில் இருந்து மிக உயரமான விமானங்களைக் கொண்ட கோயில்கள் எழுப்பப்பட்டன.
பல்வேறு திருவிழாக்கள் நடத்துவதற்கு பல பெரிய மண்டபங்கள், கோயில் வளாகத்தில் கட்டப்பட்டன. மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய பல நகரங்கள், திருவிழாக்கள் நிறைந்த கோயில் மாநகரங்களாக மாறின. அந்த வகையில் பாண்டியரின் தலைநகரமாக விளங்கிய மதுரையும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நகரமாக மாறியது.