

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் வேலூர் - பெங்களூரு சாலையில் 3 கிமீ தொலைவில் உள்ள சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில், திருமணத் தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. குழந்தை வரம் பெற, இங்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தல வரலாறு:
மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறிந்ததால், கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்து போன துக்காஜிக்கு விநாயகரின் குரல், “இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன்.
என்னை வெளிக் கொண்டு வா” என்ற அசரீரி வாக்காக கேட்டது. அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் (சாரட் வண்டி) சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.
கோயில் சிறப்பு
பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வ விநாயகருக்கு எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் மூஷிகவாகனங்களை பிரதிஷ்டை செய்தனர்.