

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆமூர் ரவீஸ்வரர் கோயில், கல்விச் செல்வம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. ஜாதக தோஷம் நீங்க சிவ வழிபாடும், பேச்சுக் குறைபாடு நீங்க இரட்டை பைரவர் வழிபாடும் இங்கு நடைபெறுகிறது.
தலவரலாறு
நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சூரிய பகவான், தாங்க முடியாத வெப்பம் காரணமாக உஷ்ணத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பிரம்மா, சூரிய பகவானின் உஷ்ணத்தைத் தணிக்க, ஆமூர் என்ற ஊரை அடைந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டால், உஷ்ணம் நீங்கும் என்று யோசனை கூறினார்.
அதன்படி, ஆமூரை நோக்கி வரும் வழியில் சூரிய பகவானின் பார்வை பட்டு எதிரில் இருந்தவர்கள் பஸ்பமாகிக் கொண்டிருந்தனர். ஆமூர் கோயிலுக்குள் உள்ளே தல விருட்சமாக இருந்த வில்வமரமும் சாம்பலாகி, பஸ்பமானது.
இதனால், தன் உஷ்ணத்தை தணிக்க தொடர்ந்து ஆமூர் கோயிலில் குடிகொண்ட இறைவனை சூரிய பகவான் மார்போடு அணைத்து பற்றிக் கொண்டதால், சூரியனின் உஷ்ணம் தணிந்தது. அவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பினார்.