

உலகம் முழுவதும் இராமாயணம் வலம் வருகிறது. இராமலக்குவர்களும் வலம் வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மொழியில் இராமாயணம் படித்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வர்ணிக்கப்படும் விதத்தால் இராமாயண காவியம் மேலும் மெருகேறுகிறது.
இராமாயணம் பயில்வோருக்கும் வாசிப்போருக்கும் கேட்போருக்கும் சீதையைத் தெரியும். ஆனால், ஜனகர் - சுநயனா தம்பதியின் மகளும் விதேஹ இளவரசியுமான ஊர்மிளையை அவ்வளவாகத் தெரியாது.
மிகுந்த பொறுமைசாலி, மெய்ஞ்ஞானம் நிரம்பியவள், கர்ப்பிணியான சீதையை இராமன் காட்டுக்குச் செலுத்தியபோது எதிர்ப்புக் குரல் கொடுத்தவள் என்றெல்லாம் ஊர்மிளையைப் பற்றிய சிற்சில துணுக்குத் தகவல்கள் உலா வந்தபோதிலும், இவளின் முழுமையான பொலிவு வெளிவருவதில்லை.
உதாசீனத்துக்கு உள்ளாக்கப்பட்டவள் என்று ஊர் மிளைக்காக வால்மீகி முனிவரிடம் கோபப்பட்டார் இரவீந்திரநாத் தாகூர்! ஊர்மிளையையும் இலக்குவனையும் மையமாகக் கொண்டு, சாகேத் என்னும் மகா காவியத்தை மைதிலிசரண் குப்தா இயற்றினார்.
இருப்பினும், கிராமப்புறப் பெண்கள், தங்களின் வீட்டுப் பணிகளுக்கிடையே பாடும் பாடல் ஒன்றில், ஊர்மிளை விஸ்வரூபம் எடுக்கிறாள். தெலுங்கு மொழியில் அமைந்திருக்கும் இப்பாடலை, 2,000-களின் தொடக்கத்தில்தான், அறிஞர்கள் அடையாளம் கண்டார்கள்; ‘ஊர்மிளாதேவி நித்திரை’என்று பெயரும் சூட்டினார்கள்.