

இராம கதை என்றெண்ணும்போதே, அணிலைப் பற்றிய நினைவும் அநேகமாகத் தோன்றிவிடும். சேதுப் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியது என்பது நம்பிக்கை. யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வதற்கான வாய்ப்பு வரும்போது, ‘அணில் போல்’ உதவுகிறேன் என்று குறிப்பிடும் வழக்கமும் நம்மிடையே உண்டு.
உலகின் பிற பிரதேசங்களில் வாழும் அணில்களுக்கு முதுகில் கோடுகள் கிடையாது. இந்தியப் பனை அணில் அல்லது முப்பட்டைப் பனை அணில் என்று பெயர் பெற்று, தென்னிந்தியா, இலங்கை போன்ற பகுதிகளை இயற்கைத் தாயகமாகக் கொண்ட அணிலுக்கு, முதுகில் மூன்று கோடுகள் உள்ளன.
சேதுப் பாலம் கட்டுவதற்குத் தலைப்பட்டபோது, இந்த அணில் வர்க்கம் உதவி புரிந்தன; உதவிக்கு நன்றி கூறும் வகையில், தன் கையிலெடுத்து இராமன் தடவிக் கொடுத்தான்; ஆகவேதான் மூன்று கோடுகள்! இந்த அணில் கதை, ஆதி காப்பியமான வான்மீகத்தில் இல்லை. இராமாயணங்கள் என்னும் வரிசையில், முதன் முதலில் எங்கே அணில் கதை வருகிறது என்று தேடினால், தெலுங்கின் ரங்கநாத இராமாயணத்தில்தான் இக்கதை முதலில் தலைகாட்டுகிறது.
ஆனால், அதற்கும் முன்னதாக அணில் தகவலை நமக்கு உரைப்பவர், தொண்டரடிப்பொடி ஆழ்வார். குரங்குகள் மலையையும் மலைப் பாறைகளையும் தூக்கிக்கொண்டு ஓடின. பார்த்துக் கொண்டேயிருந்த அணிலுக்கும் ஆசை; தானும் ஏதாவதொரு வகையில் இராம கைங்கர்யத்தில் பங்கேற்க வேண்டும்.