

தீமைகளை விட்டு விலகி நன்மைகளை அதிகம் செய்யும் அருள்நிறைந்த மாதமாக ரமலான் மாதம் உள்ளது. இஸ்லாமிய மாதங்களில் இது 9-வது மாதமாகும். இதில் தான் புனித குர்ஆன் இறக்கி அருளப்பட்டது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவான ‘லைலத்துல் கத்ர் இரவு’ ரமலான் மாதத்தில் இடம் பெறுகிறது.
தராவீஹ் என்கிற சிறப்புத் தொழுகையானது ரமலானில் ஒவ்வொரு இரவிலும் கடைபிடிக்கப்படுகிறது. சாப்பிடும் பழக்கம் இல்லாத அதிகாலை (ஸகர்) வேளையில் உணவு உண்டு ஒருமாத காலம் பகலெல்லாம் பசித்திருப்பது என்பது மனதை சீர்படுத்தி பொய் புறம் பேசாமல், வீண் விவாதங்களை விட்டு விலகி இறைவனையே வணங்கி வழிபடக் கூடிய அரிய வாய்ப்பு ரமலானில் கிடைக்கிறது.
இதுகுறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (நோன்பு நோற்றுக் கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. (நூல் புஹாரி 1903)