

இந்திய மொழிகள் அனைத்திலும், ஏதோவொரு வடிவில் இராம கதையோ கதையின் கூறோ கண்டிப்பாக உண்டு. அவை ஒவ்வொன்றிலும் வேறுபாடு இருந்தாலும், கதையின் போக்கும் அதன் நோக்கமும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இராம நினைப்பும், இராம பக்தியும் ஊடுருவியுள்ளது.
வங்காள மொழியில், க்ருதிபாச இராமாயணம் மிகுதியும் பிரபலம். 15-ம் நூற்றாண்டில் தோன்றிய க்ருதிபாச (க்ருதிவாச) ஓஜா என்னும் அறிஞரால் இயற்றப்பட்ட இந்நூல், வங்காள மொழியின் வெகு பிரபல நூல்களில் ஒன்று என்னும் தகுதியிலிருந்து இன்றுவரை விலகவில்லை. அஸ்ஸாமிய மொழி இராமாயணங்களில் மாதவ கந்தலீயின் இராமாயணம் (14-15-ம் நூற்றாண்டுகள்), மிகவும் புகழ் பெற்றதாகும்.
அனந்த கந்தலீ (16 நூ), துர்காவர காயஸ்த (16 நூ), கலாபசந்த்ர த்விஜர் (16 நூ), ஹ்ருதயானந்த காயஸ்த (17 நூ), ரகுநாத மஹந்த (18 நூ) ஆகியோரின் இராமகாதைகளும் அஸ்ஸாமிய மொழியில் உள்ளன. மாதவ கந்தலீ இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் இருந்தன என்று நம்பப்படுகிறது; இதனாலேயே ‘சப்த காண்ட இராமாயணம்’ என்றும் அழைக்கப் பெறுகிறது.
ஆனால், தொடக்கத்திலிருந்த ஆதி காண்டமும், நிறைவிலிருந்த உத்தர காண்டமும் கிட்டவில்லை. 16-ம் நூற்றாண்டு காலத்தில் தோன்றிய வைணவ ஆச்சாரியரான சங்கரதேவரும், அவருடைய சீடரான மாதவதேவரும் இந்த இரு காண்டங்களையும் பின்னர் எழுதிச் சேர்த்தார்கள். இராம காதையை எழுதும்படி மாதவ கந்தலீயை வேண்டியவர், அப்போதைய காமரூப வராஹி அரசரான மகாமாணிக்யர்.
அஸ்ஸாமிய மொழியிலும் இக்காப்பியம் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்பினார். இப்படியொரு விருப்பம் அரசருக்குத் தோன்றியதற்கு என்ன காரணம்? நாட்டின் பிற பிரதேசங்களிலும் பிற மொழிகளிலும் பரவலாக அறியப்படும் இராமன் கதை, தங்கள் மொழிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றெண்ணினார். இராமன்மீதான மக்கள் நம்பிக்கையும் மதிப்பும் எவ்வளவு என்பதை கந்தலீ இராமாயணம் தெளிவுபடுத்துகிறது. யுத்தக் காட்சிகளை விரிவாக உரைப்பதற்கு கந்தலீ விரும்பினாரில்லை.
ராமர யுஜர கதா கி கஹிபோ ஆர,
பாஹுல்ய கஹிதே நாஹி ஸம்க்ஷேப பயார