

பூமியில் உள்ள பல இராமாயணங்களுக்குள் ஒற்றுமை உண்டு. அவற்றுள் சிற்சில கதை மாற்றங்களும், சந்தர்ப்ப சூழல் மாற்றங்களும் காணப்படுகின்றன. அந்த மாற்றங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத் தான் செய்கிறது. மொத்தம் எத்தனை இராமாயணங்கள் உள்ளன என்பது தொடர்பாக பாரத்வாஜ முனிவருக்கும் வால்மீகி முனிவருக்கும் இடையிலோர் உரையாடல்;
ப்ரணீதம் பவதா யச்ச ப்ரம்மலோகே ப்ரதிஷ்டிதம்
ஸ்ரூயதே ப்ரஹ்மணா நித்யம் ருஷிபி: பித்ருபி:
ஸுரை:
பஞ்சவிம்சதி ஸாஹஸ்ரம் ராமாயணமிதம் புவி:
‘மக்களின் நன்மைக்காக மிகவும் விரிவாகத் தாங்கள் (இராம கதையை) விவரித்துள்ளீர்கள்; பிரம்மலோகத்திலும் அது பிரசித்தமானது; பிரம்மாவாலும் தேவர்களாலும் முனிவர்களாலும் முன்னோராலும் நாளும் செவிமடுக்கப் பெறுகிறது; பூமியில் 20,000 இராமாயண வடிவங்கள் திகழ்கின்றன’ என்று கூறும் பாரத்வாஜர், இராமாயணத்தின் மிக முக்கியமான, மிகவும் ரகசியமான உண்மையை உரைக்கும்படி வேண்டுகிறார்.
இந்தக் கோரிக்கையின் விளைவாகத் தோன்றியதே ‘அத்புத (இ)ராமாயணம்’. வால்மீகி முனிவரால் இயற்றப் பெற்ற காவியங்களில் இதுவும் ஒன்று. அயோத்தியில் இராமனுக்கு முடிசூட்டு விழா நிறைவேறிய பின்னர், முனிவர்களும் தவசிகளும் பெரியோரும் அங்கு வருகின்றனர். இராமனையும் சீதையையும் போற்றிப் புகழ்கின்றனர்.
எல்லோரின் அனுமதியையும் பெற்று, மிதிலைக்கு வந்திருந்த தவசி ஒருவரிடமிருந்து தான் கேள்வியுற்ற விஷயங்களை சீதை மொழிகிறாள். உவர்கடலுக்கும் தயிர்கடலுக்கும் பாற்கடலுக்கும் அப்பாற்பட்டு, தேன்கடலின் நடுவிலுள்ளது புஷ்கரத் தீவு. இங்கிருந்து ஆட்சி நடத்துகிறான் சஹஸ்ரவதன ராவணன்.
கைகசிக்கும் விச்ரவாவுக்கும் இரட்டை மகன்கள் பிறந்தனர். ஒருவனுக்குப் பத்துத் தலை; இன்னொருவனுக்கு ஆயிரம் தலை. இவர்கள் பிறந்த நேரம் இரண்டு இராவணன்கள் இருப்பர்’ என்று அசரீரிஒலித்ததால், இருவருக்குமே ஒரே பெயர் சூட்டப்பட்டது. குபேரனால் அமைக்கப்பட்ட இலங்கையைத் தான் எடுத்துக் கொண்டு, பத்துத் தலையன் ஆட்சி நடத்தினான்.
ஆயிரந்தலையனோ, புஷ்கரத்தில் உள்ளான். சூரியனையும் சந்திரனையும் வைத்துப் பந்து விளையாடக் கூடியவன். பற்பல கொடுமைகளைச் செய்பவன். தந்தையான விச்ரவாவும் பாட்டனாரான புலஸ்தியரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கொடுமைகளைக் குறைத்துக் கொள்ளாதவன்.