

இராமனை தசரதனின் புதல்வன் என்று மட்டுமே காட்டாமல், திருமாலின் அம்சம் அல்லது அவதாரம் என்றே வால்மீகி காட்டுகிறார்.
நற்குணங்களும் வீரமும் நிறைந்து, உலகில் இருக்கும் ஒருவரைக் காட்ட முடியுமா என்னும் வால்மீகியின் வினாவுக்கு நாரதர் விடை கூறி, அத்தகைய ஒருவராக இராமனை அடையாளம் காட்ட, இதிலிருந்தே வால்மீகி முனிவர் இராம கதையைக் காப்பியமாகப் பாடினார்.
இருப்பினும், இராமனுடைய பிறப்பை விவரிக்கும் தருவாயிலும், இராவணக் கொடுமைகளிலிருந்து தீர்வு நாடி தேவர்கள் தவிக்கும் தருணத்திலும், திருமாலின் அவதாரமே இராமன் என்பதை எடுத்துக் கூற அவர் தவறினாரில்லை. ‘இராவணனையும் அவனுடைய உறவு நட்பையும் அழிக்கும் நிலையில், மானுட தளத்தில் 11,000 ஆண்டுகள் வசிப்பேன்’ என்று பிரம்மாவுக்கும் தேவர்களுக்கும் திருமால் வாக்குக் கொடுக்கிறார்.
மானுஷ்யே சிந்தயாமாஸ ஜன்மபூமி மஹாத்மன:
தத: பத்மபலாசாக் ஷ: க்ருத்வா ஆத்மானம் சதுர் விதம்
பிதரம் ரோசயாமாஸ ததா தசரதம் ந்ருபம்
பின்னர், மானுட தளத்துக்கான பிறப்பிடமாக அயோத்தியை எண்ணினார்.
தாமரை இதழ்போன்ற விழிகளைக் கொண்ட அவர், தம்மையே நான்கு வடிவங்களாக்கிக் கொண்டு, தசரத அரசரே அவதார காலத்தில் தந்தையாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினார். திருமாலின் அவதாரமாகவே இராமன் உதித்தான் என்பதையும் வால்மீகியார் தொடர்ந்து காட்டுகிறார்.
ப்ரோத்யமானே ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌஸல்யா ஜனயத் ராமம் திவ்யலக் ஷண ஸம்யுதம்
விஷ்ணோர் அர்தம் மஹாபாகம் புத்ரம் இக் ஷ்வாகுநந்தனம்
அனைத்துலகும் போற்றக்கூடிய உலகத் தலைவனாக, இட்சுவாகு குலத்தின் செல்வமாக, திருமாலின் செம்பாதியாக, மங்கலக் குறிகளுடன் கூடியவனாகக் கோசலைக்கு இராமன் பிறந்தான்.