

இராமனுடைய வரலாறு, வெற்றுக் கதையன்று. அறத்தையும் அறவழி வாழ்க்கையையும் அன்றாடச் செயல்பாடுகளில் அறத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வாழ்வியல் பாடம்.
வசதிகளும் வாய்ப்புகளும் பெற்றவர்களானாலும் சுயக் கட்டுப்பாடு, பணிவு, அடக்கம், பற்றின்மை போன்ற குணங்கள் ஒருவருக்கு மேன்மையைத் தரும்; அதிகாரம், ஆளுகை, ஆற்றல் ஆகியவை இருப்பினும் காமம், மோகம், மதம், பொறாமை போன்றவை இழிவையே தரும். ஒவ்வொரு மனிதரும், எக்காலத்தும் எஞ்ஞான்றும் நினைவில் கொள்ளவேண்டிய இத்தகைய பண்புநலன்களைத்தாம் இராமகதை எடுத்துரைக்கிறது.
இராமகதையின் இப்படிப்பட்ட நிலைத்தன்மையை, இக்கதை எடுத்தாளப்பட்டிருக்கும் அனைத்து இடங்களிலும் நிலைகளிலும் காணலாம். ஸ்வேதம்பர சமண மார்க்கத்தின் ஆச்சார்யர்களில் ஒருவர் விமலசூரி என்பார். ஆச்சார்ய விஜயசூரியின் சீடரான விமலசூரி, நைலகுல (நாகேந்திரகச்சம் என்றும் வழங்கப்படுவது) வம்சாவளியைச் சேர்ந்தவர்; பொ.ஊ. முதல் நூற்றாண்டுக் காலத்தவராகக் கருதப்படுகிறார்.
சமண பூர்வதாரிகளில் ஒருவரான விமலசூரி, பௌமசரியு (அல்லது பௌமசர்யம்) என்னும் காவியம் ஒன்றை, மஹாராஷ்ட்ரி பிராகிருத மொழியில் இயற்றியுள்ளார். இராமனுடைய வரலாறுதான் – இராமனுடைய பெயர் பத்மன் (இதுவே பிராகிருத ஒலிக் குறிப்பில், பௌமன் என்றாகும்)! பத்மனுடைய சரிதம் – பத்மசரியு என்றும் இக்காவியத்தைக் குறிப்பதுண்டு.
நமக்கு நன்கு பரிச்சயமான அதே கதைப் போக்குதான்! இக் ஷ்வாகு குல அரசரான தசரதரின் மகன்கள் நால்வர்; நால்வரில் மூத்தவன் பத்மன்; ஜனக மன்னரின் மகள் சீதை; பத்மனுக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கிறது; நேர்மையும், உண்மையும், அறமும், ஆற்றலும், வீரமும், ஆன்மிக ஈடுபாடும் நிரம்பக் கொண்ட பத்மன், குடும்பச் சூழல்கள் காரணமாகக் கானகம் செல்ல நேர்கிறது.
சீதையும் தம்பி லக் ஷ்மணனும் உடன் செல்கின்றனர். காட்டு வாழ்க்கையில் பணிவும் ஒழுக்கமும் பத்மனின் பெருமைகளாக, சீதையோ நேர்மையிலும் துணிவிலும் நிலைபெறுகிறாள். விசுவாசமும் தொண்டும் லக் ஷ்மண குணங்களாகின்றன.