

இராம குழந்தையை அவ்வள வாகப் பலரும் தாலாட்டவோ சீராட்டவோ இல்லை என்று ஆதங்கப்பட்டோமில்லையா? அந்த ஆதங்கத்தை தியாகய்யர் ஒருவரே தீர்த்து விடுகிறார்.
தொட்டிலில் அமர்த்தி மகனை லாலி ஆட்டவேண்டுமென்று கௌசல்யைக்கு ஆசை. அன்போடு அழைக்கிறாள். குழந்தையின் முகத்தை வந்து தழுவும் காற்றையும் அந்தக் காற்றில் அலையும் அவனுடைய முன்னுச்சி அளகத்தையும் காணும்போது...ஆஹா.. என்ன சுகம், என்ன சுகம்.
அன்போடு அழைக்கிறாள். அவனோ முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு வருகிறான். ஒன்றும் புரியாமல் மீண்டும் அழைக்கிறாள்.
ராம ராம ராம லாலி ராம, ராம ராம
லாவண்ய லாலி ராம
ராமா ராமா அழகு ராமா, லாலி ஆடு ராமா...
தொரகராநி நிதி ராரா, தொரகு தொரவு நீவு
தொட்லலோ ராரா
கிடைத்தற்கரிய செல்வமே வா வா,
துரைகளுக்கெல்லாம் துரையானவனே
தொட்டிலில் ஆட வா வா...
வரமன நட்டி நா பட்டி ராரா, சுருலகு அருதைந
சுந்தர ராரா
சிறப்பான என்னுடைய குழந்தையே வா வா,
தேவர்களுக்கும் கிடைத்தற்கரியவனே வா வா...
தொலி ஜேஸின நோமு பலமா, ராம இலநு
வெலயு இனகுல தனமா
முன்பு செய்த நோன்பின் பயனே, பூவுலகில்
தோன்றிய சூரிய வம்ச தனமே...