

உலகமெல்லாம் இராம காதை பரவியிருப்பதைப் போல, மங்கோலியாவிலும் உண்டு. சுபாஷிதம், படிகக் கண்ணாடி போன்ற நூல்களில் ஆங்காங்கே இராம காதையின் கூறுகள் காணப்பட்டாலும், முழுமையான இராம காதையை ‘ஜீவக வம்சம்’ என்னும் நூலில் காணமுடிகிறது.
மங்கோலிய மொழியின் ஆய்ரத் லிபியில் அமைந்துள்ள நூலின் பிரதிகள், லெனின்கிராட் நகர நூலகத்தில் இருப்பதாக அறிஞர் டாம்டின் சுரென் பதிவு செய்கிறார். எட்டு பிரிவுகள் அல்லது அத்தியாயங்களில் கதை விரிகிறது.
அத்தியாயம் 1 – அரசர் ஜீவகனுக்கு மூன்று மனைவியர். ஆயினும் குழந்தைகள் இல்லை. வம்ச வாரிசாக மகன் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜீவகன், ஜோசியர் ஒருவர் சொன்னதை வைத்து, ஔதும்பர மலரைத் தேடிச் செல்கிறார் (ஔதும்பர அல்லது உதும்பர மலர் என்பது அத்தி மலர்).
அத்தியாயம் 2 – ஔதும்பர மலரை எப்படியோ தேடிக் கண்டுவிடும் அரசர், தன்னுடைய மனைவிகளுக்கு அதைப் பகிர்ந்து கொடுக்கிறார். மனைவியருள் ஒருவளுக்கு மகன் பிறக்கிறான். ராமன் என்று பெயர் சூட்டப் பெற்று, அரசாட்சியில் அமர்த்தப் பெற்று, மக்களை மகிழ்ச்சியோடு வாழச் செய்கிறான்.
அத்தியாயம் 3 – லங்கை என்னும் நாட்டின் அரக்கன், தங்க உடலும் வெள்ளி வாலும் கொண்ட மான் வடிவமெடுத்து, ராமனுடைய நாட்டில் வாழும் முனிவர்களையும் தவசீலர்களையும் திசை திருப்ப முனைகிறான். அவர்கள் அரசனிடம் முறையிட, கல்லைக் கொண்டு மானின் கண்களை திசை திருப்பும் ராமன், அதனை விரட்டியும் அடிக்கிறான். நன்றி செலுத்திவிட்டுத் திரும்பும் முனிவர்கள், கண்களுக்குப் புலப்படாத ஆற்றலை ராமனுக்கு அளித்துவிட்டுச் செல்கிறார்கள்.
அத்தியாயம் 4 – அரக்க நாட்டுப் பெண்களில் ஒருவளுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. இந்தப் பெண் உயிரோடு இருந்தால், நாடு சிதையும் என்று ஜோசியர் சொல்லிவிட, பெண் குழந்தையைப் பெட்டியில் வைத்துக் கடலில் விட்டு விடுகின்றனர்.
அத்தியாயம் 5 – குழந்தை வைக்கப்பட்டுள்ள பெட்டி, ஜம்புத்வீபத்துக்கு மிதக்கிறது. விவசாயி ஒருவர், அதனை எடுக்கிறார். குழந்தையைத் தன்னுடைய மகளாக வளர்க்கிறார். அழகு மங்கையாக உருவான அந்த அணங்கை, அரசன் ராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.