

இராமகாதையின் வெவ்வேறு நிகழ்வுகளும் கூட, கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் விதவிதமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன. வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்கள், தத்தம் வாழ்விடங்களில்தாம் இந்நிகழ்வுகள் நடந்ததாக எண்ணுவதும், அவற்றுக்கேற்ப சிற்சில துணைக் கதைகளைத் தோற்றுவித்திருப்பதுமே, இராம வரலாற்றோடு ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டுவிடவேண்டும் என்னும் விருப்பத்தின் வெளிப்பாடு எனலாம்.
தோளில் மலையைத் தாங்கிக் கொண்டு, விண்ணில் பாய்ந்துவரும் அனுமனின் திருவடிவை எல்லோரும் பார்த்திருக்கிறோம். உயிர் காக்கும் மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி பர்வதத்தை அனுமன் கொண்டு வந்தான் என்பதும் தெரியும். இந்த நிகழ்வின் நுணுக்கங்களைச் சற்றே அணுகுவோம்.
இந்திரஜித்தன் செலுத்திய பிரம்மாஸ்திரப் படையால், வானரப் படைவீரர்களும், (இ)ராமனும் லக் ஷ்மணனும் வீழ்ந்துவிடுகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் அனுமன் தடுமாற, விபீஷணன் சாமாதானப்படுத்தும் விதமாக நல்வார்த்தைகள் கூறுகிறான்.
இருவருமாகச் சேர்ந்து யாரும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்களா என்று இருட்டில் துழாவித் தேடுகிறார்கள் (மாலை நேரத்தில்தான் அனைவரும் வீழ்ந்தார்கள்). உடலெல்லாம் அம்புகள் துளைக்க, மூப்பும் களைப்பும் ஒன்று சேர்ந்து தள்ளிவிட, எங்கோ சாய்ந்துகிடக்கும் ஜாம்பவானைக் கண்டுவிடுகிறார்கள்.
அருகில் சென்று பேச ஆரம்பிக்க, விபீஷணன் குரலை அடையாளம் தெரிந்துகொள்ளும் ஜாம்பவான், தன்னால் இப்போது பார்க்கமுடியவில்லை என்று கூறி, அனுமன் எங்காவது இருக்கிறானா என்று வினவுகிறார்.
அனுமன் இருப்பது தெரிந்ததும், சஞ்சீவி மலைக்குச் செல்லும்படி ஆணையிடுகிறார். ‘வடதிசையில் பயணித்து இமயமலையை அடைவாய். அதன்மீது நின்றால், இன்னும் வடக்கே ரிஷப மலைச் சிகரத்தைக் காண்பாய்.
அதனை அடைந்து நின்றால், கைலாயச் சிகரம் தெரியும். கைலாயச் சிகரத்திலிருந்து காணும்போது, மூலிகைகளின் வீரியத்தால் கொழுந்து விட்டெரியும் அக்னிபோல் காட்சி தரும் சஞ்சீவியைக் காண்பாய்.