

உலகம் சுற்றும் இராமாயணத்தில், சுவாரசியமான சம்பவங்கள் உண்டு. ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஏற்ப, அவற்றில் சிற்சில மாற்றங்களும் காணப்படுகின்றன. இவற்றில், பாசம், வீரம், காதல், பிணைப்பு, சகோதரத்துவம், பழைய பாரம்பரியம், வழக்காடு சொற்கள் என்று அனைத்தும் வெளிப்படுத்தப்படுகின்றன.
தெற்காசிய வட்டாரங்களில் புழங்கும் (இ)ராம கதைகள் என்று எடுத்துப் பார்த்தால், பர்மிய ராமாயணங்களை முதன்மை இடத்தில் வைக்கலாம். ஊ ஆங் ஃபையோ என்பவரால் 1775-ல் இயற்றப்பட்ட (இ)ராம தக்யின் என்னும் கவிதை நூலும், 17-ம் நூற்றாண்டில் எழுத்து முறைக்குக் கொணரப்பட்ட (இ)ராமவத்து என்னும் உரைநடைக் காப்பியமும் பழமையானவை.
ஆயினும், இவற்றைக் காட்டிலும் பழமையாக, இராம கதை வழக்குகள் இருந்துள்ளன. ஒரு சில கோயில் பகுதிகளில், இராம மற்றும் பரசுராம வடிவங்கள், புடைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ‘மான்’ மொழிக் கல்வெட்டு ஒன்றில், தம்முடைய பண்டைய பிறப்பில், அயோத்தி இராமனுக்கு நெருக்கமான உறவாகத் தாம் இருந்ததாக க்யான்சித்த அரசர் (காலம் 1084-113) பதித்துள்ளார்.
இராமனுடைய கதை என்றாலும், ஆங்காங்கே சுவாரசியமான, வட்டார மாற்றங்களும் காணப்படுகின்றன. கோண்டி என்பவளின் மகன்தான் தசகிரி (இராவணன்). பிரம்மாவை நோக்கித் தவம் செய்த கோண்டி, பத்துப் பழங்கள் கொண்ட வாழைச் சீப்பு ஒன்றைப் படையலாக வைத்தாள். இதனால், பத்துத் தலைகள் கொண்ட தசகிரி பிறந்தான்.
தசகிரியின் அட்டகாசம் தாங்காமல், பூமியின் காவல் தேவதைகளும் இந்தனும் (இந்திரன்) பிரம்மாவிடம் முறையிடுகின்றனர். துசித ஸ்வர்க்கத்தில் இருக்கும் போதிசத் தேவரும் பிற தவசிகளும், இராமனாகவும் மூன்று சகோதரர்களாகவும் பிறப்பெடுக்கின்றனர். இராமனும் சீதையும் லக்கனனும் வனவாசத்தின்போது, வாலமிகியின் (வால்மீகிதான்) ஆசிரமப் பகுதியில் தங்குகின்றனர்.