

உலகம் முழுவதும் பரவியுள்ள இராமாயண காவியங்களைப் பார்க்கும்போது, ஒவ்வொன்றிலும் உள்ள மாற்றங்களை அறியலாம். அவற்றில் காணப்படும் உள்ளூர் நம்பிக்கைகள், மரபுகள் ஆகியன அந்தக் காவியத்துக்கு சுவை கூட்டுகின்றன. படிப்பவருக்கு சுவாரசியம் அளிக்கிறது.
லாவோஸ் நாட்டில் காணப்படும் அவான்மீக இராமாயணங்களில் ஒன்று, க்வே துவராஃபி. எருமை அரசனான துவராஃபியின் (வாலியோடு யுத்தம் செய்த துந்துபி என்னும் எருமைத் தலையன்தான், இந்த துவராஃபி) பெயரால் அமைந்திருந்தாலும், இராம கதை முழுமையும் இதில் உண்டு. மாற்றங்களும் உண்டு.
சிருஷ்டி தொடங்கி நடைபெற்ற முதல் கல்பத்தில், தப்பரமென்சுவன் என்னும் அரசர், காசி ராஜ்யத்தை ஆண்டார். மூன்று அரசிகள் வழியாக, இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒருவருக்கொருவர் தகராறு வரக் கூடாது என்பதற்காக மூன்று வெவ்வேறு பகுதிகளை இவர்களுக்கு கொடுத்தார்.
தத்தரதன் என்னும் மூத்த மகனைத் தம்மோடு காசியை ஆளும்படி வைத்துக் கொண்டார். இரண்டாவது மகன் விருன்லஹன் என்பவனைத் தொலைவிலிருந்த லங்கைக்குத் தலைவனாக்கினார். விருபக்கன் என்னும் கடைசி மகனைக் குருரத்தனகோன் என்னும் பகுதியின் அரசனாக்கினார்.
விருபக்கனுக்கு இரண்டு பிள்ளைகள் – ராமன் மற்றும் லக்கனன். விருன்லஹனுடைய பிள்ளைகள் மூவர் – ரஃபணசுவன் (ராவணாசுரன்), ஃபிக் ஃபி (விபீஷணன்), இந்தசிக் (இந்திரசித்தன்).
தத்தரதனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் – மூத்தவன் ஃபாரி (வாலி), இளையவன் சுகிப் (சுக்ரீவன்), மகள் நங் காசி. இந்திரனைப் போல் தன்னை மாற்றிக் கொள்ளூம் ரஃபணசுவன், பெண்களிடம் தகாத வகையில் நடந்து கொள்கிறான்.
இந்திரனுடைய பட்டத்தரசி நங் சுஜாதா, சீதையாக (நங் சிதா) அவதரிக்கிறாள். கச்சப முனிவரால் வளர்க்கப்படுகிறாள். நங் சிதாவின் பேரழகைச் செவியுற்ற ஜம்புத்வீப மன்னர்கள் பலரும், ஆச்ரமத்தைச் சூழுகிறார்கள். ஸஹஸ்ஸத்தம தனு என்னும் வில்லை நாணேற்றினாலொழிய நங் சிதா கிட்ட மாட்டாள் என்று முனிவர் அறிவிக்கிறார்.