

இராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் பாரத தேசத்து மக்களின் உள்ளங்களோடும் உணர்வுகளோடும் ஒன்று கலந்தவை. அன்றாட பழக்க வழக்கங்களில்கூட இராமனை, கண்ணனை, சீதையை, அனுமனை இணைத்துக் காணும் வழக்கம் வெகு சகஜம்.
பக்தர்கள் பலர் ஏகாதசி நாளில் விரதமிருப்பார்கள்; நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து, துவாதசி அன்று பாரணை செய்து உணவருந்துவார்கள். பாரணம் என்றால் உண்ணுதல்.
ஏகாதசி விரதத்தை நிறைவு செய்து, துவாதசி நாளின் காலையில் திருமாலை வழிபட்டு, துளசி தீர்த்தம் அருந்தி, பின்னர் உணவருந்துவதையே துவாதசிப் பாரணை என்று குறிப்பது வழக்கம்.
துவாதசிப் பாரணையில் அகத்திக் கீரைக்கும் நெல்லிக்கனிக்கும் முக்கிய இடம் உண்டு (துவாதசிப் பாரணைக்கு வைத்திருந்த நெல்லிக்கனியை சங்கர பிரம்மச்சாரிக்குக் கொடுத்த பெண்மணியின் கதை நினைவுக்கு வருகிறதா?).
அகத்திக் கீரைக்கு துவாதசியின் புண்ணியத்தைக் கொடுத்து பெருமை சேர்த்தது யார் தெரியுமா? வேறு யார், இராம தொண்டனான அனுமன்தான்!
இராமன் கதையை நாடகக் கீர்த்தனங்களாகப் பாடிய அருணாசலக் கவிராயர், அனுமன்மீது பிள்ளைத் தமிழ் நூலொன்றும் பாடியிருக்கிறார்.
அதிலிருந்து ஒரு பாட்டு:
முகத்தில் கண்டு பரதனிடம் அணிமோதிரம்
கொண்டு அண்டர் அண்ட
முகடு கிழிய எழும்பி எம்மான்
முதலோர் அமுது செய்யும் இடத்தில்
உகைத்துப் பாய்ந்து பரதன் இன்னம்
உளன் என்று உரைத்து மணிவண்ணன்
உதவும் தெய்வப் பரிகலம் கொண்டு
உயர் கானகத்து ஓர் புடை ஏறிப்
புகழ்ச்சி பெற உண்டிட பல வானர
வீரரும் ஓர் இலை இலையாப்
பொருந்தி நுகரத் துவாதசியில்
புவியோர் உண்டு கதியடைய
அகத்தி தனக்கும் கதி கொடுத்த
அறிவா சிற்றில் சிதையேலே
அனகா திரிநேத்திர வீரா
அனுமா சிற்றில் சிதையேலே
பாடலின் சூழல்: இலங்கையிலிருந்து இராமனும் சீதையும் இலக்குவனும் பிறரும் புறப்பட்டுவிட்டனர். இருப்பினும், பதினான்கு ஆண்டுகள் முடியப் போகும் தருணம் என்பதால், அனுமனை முன்னதாக பரதன் தங்கியிருந்த நந்திகிராமத்துக்கு அனுப்பிவிட்டு, பாரத்வாஜ ஆசிரமம் செல்கிறான் இராமன்.