

மானுடத்தைச் செழிக்கச் செய்வதில் இராமகதையின் பங்களிப்பு அளப்பரியது. மொழி, சூழல், பழக்க வழக்கங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப, சிற்சில மாற்றங்கள் இருக்கலாம்; பெயர்கள்கூட மாறி இருக்கலாம். ஆனால், அறத்தின் ஊக்கமும் அன்பின் ஆக்கமும் மாறா.
பாரதத்துக்கு அருகிலிருக்கும் பிரதேசங்களில் இராமகதைக்குச் செல்வாக்கு உண்டு. தொலைவிலிருக்கும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் இராமனுக்குச் சிறப்புண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தைரானோ யாசுயொரி என்னும் துறவி. இவர் செப்பனிட்டுத் தொகுத்துள்ள இலக்கியத் தொகுப்புக்கு ஹொபுத்சுஷு என்று பெயர்.
இந்த ஜப்பானியப் பெயருக்கு ‘புதையல் தொகுப்பு’ என்று பொருள். ஹொபுத்சுஷுவில் இராமகாதை காணப்படுகிறது. தத்தகத்த சாக்யமுனி என்னும் அரசரும் அவருடைய அரசியும், எதிரியின் படையெடுப் பின்போது நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். காட்டில் மிக எளிமையாக இவர்கள் வசித்துவரும்போது, இவர்களுக்கு உதவுவதற்காக வருகிறார் அந்தணர் ஒருவர்.
ஒரு நாள் அரசர், நதிக்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, அரசியைக் காணவில்லை. தேடி அலையும்போது, பறவையொன்று இறக்கைகளில் அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது. அந்தணரே அரசியைக் கடத்தியவர் என்பதைத் தெரிவிக்கும்போது, தான் சண்டையிட்டதையும், அந்தணர் அரக்கராக மாறியதையும் கூறிவிட்டுப் பறவையானது இறந்துபடுகிறது.
பறவை காட்டிய தெற்கு திசை நோக்கி அரசர் செல்ல, வழியில் குரங்குகள் பல எதிர்ப்படுகின்றன. தங்களின் நாட்டை அண்டை அரசனொருவன் அடித்துப் பறித்துக் கொண்ட விவரத்தை வெளியிடுகின்றன.