

இராம காவியத்தில், இராம சகோதரனான இலக்குவனுக்கு உயர் சிறப்பு உண்டு. வைணவ மரபில் ‘இளையாழ்வான்’ என்றும், ‘இளையபெருமாள்’ என்றும் அழைக்கப்படும் இலக்குவனுக்கு, ‘இராமானுஜன்’ என்றுமொரு பெயருண்டு; இராம + அனுஜன். ‘அனுஜன்’ என்றால் ‘இளையவன்’ என்றும் ‘கூடவே இருப்பவன்’ என்றும் பொருள்கள் உண்டு.
தெற்காசிய இராமாயணங்களில் ஒன்றான ராமகீயன், இலக்குவனின் பெருமைகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. லொங்கா அரசின் தலைவன் தோத்ஸகன். அனைவரையும் இவன் துன்பப்படுத்தும் நிலையில், அரக்கர்களையும் தீமைகளையும் களைய வேண்டும் என்று தீர்மானிக்கும் ப்ரா இசுவன் (சிவன்), பூமியில் அவதாரம் எடுக்கும்படி ஃப்ரா நராய் என்னும் விஷ்ணுவை வேண்டுகிறார்.
தம்முடைய செயல்பாடுகள் நன்மை அளிக்கவேண்டுமானால், மனைவியான ஃப்ரா லக்சாமி, காசியன் ஸமுத் என்னும் பெரும் பாற்கடலில் தம்முடைய சிங்காசனமாகத் திகழும் நாக அனந்தன், தம்முடைய சங்கு-சக்கரம்-கதை ஆகிய பரிவாரங்கள் தம்முடன் வரவேண்டும் என்று வேண்டுகிறார்.
இசுவன் ஒத்துக்கொள்ள, அயுத்ய மன்னர் தோத்ஸரத் என்பவருக்கு நான்குப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஃப்ரா நராய், ஃப்ரா ராம் ஆகிறார்; நாக சிம்மாசனமும் சங்கும் இணைந்து ஃப்ரா லக் ஆகின்றன(ர்); சக்கரம், ஃப்ரா ஃப்ரோட் ஆக, கதையானது ஃப்ரா சதருத் ஆகிறது. பிள்ளைகளின் பிறப்பை விவரிக்கும்போதே, ஃப்ரோட்டும் சதருத்தும் இளவரசர்கள் என்றே வர்ணிக்கப்படுகின்றனர்.