

சேலத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள குமரிகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில், புத்திரப் பேறு அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமணத்தடை நீங்க மாம்பழம் படைத்து இங்கு வழிபாடு செய்யப்படுவதால், இத்தல முருகன் ‘மாம்பழ முருகன்' என்று அழைக்கப்படுகிறார்.
நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டுமென கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் ஒரு குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, ‘தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்’ என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார்.
பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அந்த பக்தர், அவ்விடத்தில் கோயில் கட்டினார்.
மாம்பழத்துக்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்கு பிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.