

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 16 கிமீ தொலைவில் உள்ள நன்னிலம் மதுவனேஸ்வரி உடனுறை மதுவனேஸ்வரர் கோயில், மோட்சம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது.
மூலவர்: மதுவனேஸ்வரர் (கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்).
அம்பாள்: மதுவனேஸ்வரி.
முன்னொரு காலத்தில் தேவர்களின் சபையில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்துக் கொண்டான். எனவே வாயுபகவானால் மகாமேருவை அசைக்க முடியவில்லை. இதனால் எல்லா உலகங்களும் அதிர்வடைந்தது.
உலகமே அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக் கொள்ள, மகாமேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்து செல்லும்போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது.