

இராமாயணத்தில் இராவணன் பத்து தலை, அதற்கேற்ற அவயவங்களுடன் அடையாளம் காட்டப்படுகிறான். அவனது ஒன்றுவிட்ட தம்பியாக அறியப்படும் மயில் ராவணன் ஒரு மாயாவி. இந்த கதாபாத்திரம் கம்ப ராமாயணத்திலும் இல்லை. வால்மீகி ராமாயணத்திலும் இல்லை. இது நாட்டார் கதை ஆகும்.
இராமாயணம் தெருக்கூத்து நடக்கும்போது இதை உபகதையாக நடத்துவார்கள். இராவணன் லங்காபுரி ராஜா என்றால் மயில் ராவணன் பாதாள லோக இலங்கையின் மன்னன். சுருள் சுருளான கற்பனைகள். பாமர மக்களின் விசித்திர வினோத கற்பனை. நிஜ இராமாயணத்துக்கு நேர் விரோதம். நிஜ இராமாயணத்தில் இலங்கைமீது படையெடுக்க இராமன் வானர சேனையின் உதவியுடன் கடல்மீது பாலம் கட்டினான். மயில் ராவணன் இராமனையும் லட்சுமணனையும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் விட்டான்.
மயில் ராவணன் மட்டுமில்லை. மேட்டுக்குடியினர் கடவுள்கள், இதிகாசங்கள் இதெல்லாம் பாமர மக்களுக்கு எட்டும்படியாக இல்லை. தங்களுடைய கடவுளை தாங்களே படைத்து, அவர்களுக்கு என்று கதை நாடகம் எழுதியுள்ளார்கள். அதுதான் தெருக்கூத்து. தெருவில்தான், மண்ணில்தான் நாடகம் நடக்கும். மயில் ராவணன் கதையும் அப்படி ஒருவகை கதைதான்.