

சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீசுவரர் கோயில், நாகதோஷம் போக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சரபேஸ்வரரை வழிபடுகின்றனர். வக்கிரதோஷ நிவர்த்திக்கு இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன் கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை” என்றார்.
சிவன் அவரிடம், “கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல” எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்தி பெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் விருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, ‘தேனுபுரீசுவரர்’ எனப்பட்டார். ‘தேனு’ என்றால் பசு. இவருக்கு, ‘உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்’ என்றும் பெயர் உண்டு.