

கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் 4 கிமீ தொலைவில் உள்ள திருக்கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், அனைத்து செல்வங்களையும் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 44-வது தலம் ஆகும்.
ஒரு சமயம் இளவரசன் ஒருவனுக்கு பத்திரயோகி முனிவர், கடும் சாபம் கொடுத்தார். இதன் காரணமாக அவரது தவவலிமை குன்றியது. வருந்திய முனிவர் பரிகாரம் தேட முற்பட்டார். பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்ட அவர் கொட்டையூருக்கு வந்தார். இங்கு அமுத கிணற்று நீரில் பத்திரயோகி முனிவர் நீராடி, ஈசனை வழிபட்டு கோயிலை வலம் வந்து வணங்கினார்.
அப்போது ஓர் அசரீரி, “பத்திரயோகி! கோடி தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். இந்தத் தலமே அந்த பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடி லிங்கம். இந்த தீர்த்தமே கோடி தீர்த்தம். இந்த விநாயகரே கோடி விநாயகர்” என்று ஒலித்தது.