

புனித வாயில் என்பது மாற்றம், நம்பிக்கை மற்றும் அமைதிக்கான ஒரு பாதை ஆகும். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில், ‘போர்ட்டா சான்டா’ என லத்தீன் மொழியில் அழைக்கப்படும் புனித வாயில் (Holy Door), ஒரு புனிதமான மற்றும் ஆழமான ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரியமாகும்.
இது ஆன்மிக மீட்பு, புத்துயிர் மற்றும் கடவுளின் கருணைக்கான ஒரு சின்னமாகப் பார்க்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை, கிறிஸ்து பிறந்த ஒவ்வோரு 25 ஆண்டையும் யூபிலி ஆண்டாக (Jubilee Year) அறிவித்துக் கொண்டாடும். இது தவிர, Extraordinary Jubilee Year என்ற அழைக்கப்படும் யூபிலி ஆண்டுகளும் திருத்தந்தையால் அறிவிக்கப்படும்.
இந்த 2025 யூபிலி ஆண்டு, 2024-ம்ஆண்டு டிசம்பர் 24 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதவாயிலின் கதவு திறந்து ஆரம்பிக்கப்பட்டு, 2026-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் (திருக்காட்சித் திருவிழா) அன்று திருத்தந்தை லியோ 14 அவர்களால் புனித வாயிலின் கதவு மூடப்பட்டு நிறைவு செய்யப்படும்.
இந்த யூபிலி ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமான வாடிகனில் ஆண்டு முழுவதும் புனித நிகழ்வுகள் நடைபெறும். அதற்காக உலகம் முழுவதும் இருந்து திருப்பயணிகள் பயணம் மேற்கொள்வர். மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டு முழுவதும் ரோம் நகருக்கு வருகை தருவர்.
இவர்களுக்கு உதவி செய்ய உலகின் பல நாடுகளில் இருந்தும் தன்னார்வப் பணியாளர்கள் வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு வாடிகனில் குறைந்த அளவு ஒரு வாரமும், சிலர் மாதக் கணக்கிலும் தங்கிப் பணியாற்றுவர். புனித வாயிலின் பாரம்பரியம் கிபி.1300-ம் ஆண்டில் போப் போனிஃ பேஸ் 8 அவர்களால் முதல் யூபிலி ஆண்டில் (Jubilee Year) தொடங்கப் பட்டது.